சந்திப்பு
நாம் கடற்கரையில் அல்ல
ஒரு ரயில்வே நிலைய நடைபாதையில்.
அது வழியனுப்பி வைக்க எவருமில்லாதவர்கள்
பிறரை வழியனுப்ப வந்தவர்களைக் காணும் மாலைப்பொழுது.
பொன்மஞ்சள் மயக்க ஒளி பரவத்தொடங்கிய
அந்தக் கணத்தில் தோன்றியது,
இது போன்ற சூரிய அஸ்தமனங்களை
உன்னுடன் அமர்ந்து காண்பதற்காகவே
இந்தப் பூமிக்கு வந்திருக்கிறேன் என்று.
ஆனால் உன்னிடம் சொல்லவில்லை,
தன்னில் தான் மூழ்கும் மெளனம்.
முடிவற்ற விழிகளால்
மரங்கள் உன்னைப் பார்த்ததைக் கூட
நீ கவனிக்கவில்லை,
உன் அலைபேசியில் கைகளை
அளைந்துகொண்டிருந்தாய்.
கையெல்லாம் மணலா ?
ரயில்களின் ஆர்ப்பரிப்பைச் செவியுற்றபடி
உன் பாதங்களைத் தீண்டுவது குறித்த
கற்பனைகளில் நான் ஆழ்ந்திருந்தேன்.
ஏதோ பேசினோம் என்றுதான் நினைக்கிறேன்.
பின்பு உன் ரயில் வந்து நின்றது,
அப்புறம் தெருவிளக்குகளாலும்
மின்மினிகளாலும் அல்ல
கூந்தலின் நறுமணத்தாலும்
பின்னங்கழுத்தின் வெம்மையாலும் தொடங்கிவைக்கப்படும்
ஓர் இரவு புலர்ந்தது என்னில்.
வெளிச்சத்தால் எதையும் துலக்கிக்காட்ட இயலவில்லை
இருட்டின் உதவியில் பார்த்தேன் ஒவ்வொன்றையும்
ஆ! இருள் உலையில் கொதிக்கும் வண்ணங்கள்.
நட்சத்திரங்கள் கொள்ளையடித்தது போக
நிலவொளி பசியாற உண்டது போக
மிஞ்சியவனாக
பெயர்களின் நங்கூரம் எங்கும் அவிழ்க்கப்பட
ஏதோவொரு ஊர் என்ற நினைவில்
ஏதோ பாதை என்ற மயக்கத்தில்
ஒரு பெயர் கூட இல்லாமல்
உதடுகளாலும் விரல்நுனிகளாலும்
உன்னை நினைத்தபடி
சிறு காற்றுக்கும் பறந்துவிடும் சருகு என
மிதந்துகொண்டிருந்தேன்
தூரத்தின் தண்டவாளத்தில் பாயும்
ரயிலின் சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருப்பவளே
சொல்
இந்த வாட்டும் குளிரை மொழியென மாற்றி என்னிடம் சொல்
உன் இரவின் கதை என்ன?
*

Comments
Post a Comment