Posts

அலைகளை எண்ணுபவன்

Image
1.அலைகளை எண்ணுபவன்

உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே
கடற்கரைக்கு வருகிறான். கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் தேயிலைப் பையென
தொலைவில் மூழ்கிக்கொண்டிருக்கிறது சுடரும் ரத்தப்பந்து.
அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு
எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும்.
ஈரமணலில் அமர்ந்து
அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான்.
பின்னர் எண்ணத்தொடங்குகிறான்.
ஒன்று.. இரண்டு .. தனிமை..மூன்று..நான்கு.. 
வந்துகொண்டே இருக்கின்றன அலைகள்
மிகத்தனிமையான அலைகள்..

00

2.கறுப்புக் காகிதம்

நீளக்காகிதங்களை நிறையவே தீர்த்திருக்கிறேன்.
நீங்களும் பயன்படுத்தி இருப்பீர்கள்.
சோவென வெய்யில் பெய்கிறது.
வெறுமையை மூக்கு கண்ணாடி போல அணிந்தபடி
பரபரப்பான மேம்பாலத்தில் நிற்கிறேன்.
கீழேயும் ஒரு காகிதம் இருக்கிறது.
கறுப்புக்காகிதம்..
எவரென்று தெரியவில்லை,
வாகனங்களையும் மனிதர்களையும் விலங்குகளையும் எழுத்துருவாக்கி
தாறுமாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
அடுத்தப் பக்கத்தில் என்ன எழுதுவார்
எனக்கு ஆர்வம் பொறுக்கவில்லை.

00

3. அந்தமற்ற நீலவதனம்

கட்டிடங்கள் அண்ணாந்து பார்த்தபடி நிற்கின்றன ஈஸ்டர் தீவத்து ராட்சதர்கள் போல.
கான்கிரீட் க…

இயக்கம் [நுண்கதை]

Image
,

-நிகழ்வு 1-
அவருக்கு என் வயது இருக்கும் . திடுமென எங்கிருந்தோ வந்த இன்னொருவர் ஏன் முறைக்கிறாய் என கேட்கிறார். இவர் நான் பார்க்கத்தான் செய்தேன் என்கிறார். எல்லோரும் எல்லோரையும் புரிந்துகொண்டுவிட்டால்..
-நிகழ்வு 2-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். ஒரு இளம் ஜோடி கடை வளாகத்தில் சிரித்து பேசியபடி செல்கிறது. கொஞ்சநேரத்தில் ஆளுக்கொரு திசையில் ஆத்திரமான உடல் பாவனையோடு செல்கிறார்கள். கடை வளாகம் இன்னும் நெரிகிறது.
-நிகழ்வு 3-
ஒரு முதியவர் திண்ணையில் உட்கார்ந்து கண்டமேனிக்கு இனம்காணயியலாத மொழியில் வசைபாடிக்கொண்டிருக்கிறார். ஒரு காய்ந்த இலை மட்டும் உருண்டு கொண்டிருக்கிறது. தெருவில் யாருமே இல்லை .
-நிகழ்வு 4-
மழை வரும் போலிருக்கிறது. மெல்ல மெல்ல நடந்து வந்தவர் குறுகுறுவென வானத்தை பார்க்கிறார், பின்பு நகர்கிறார்.. கேள்விக்குறியை போலிருக்கும் தென்னை ஓலை பொத்தென இப்போதுதான் முளைத்திருக்கும் மிளகாய்ச் செடியின் மீது விழுகிறது.
-நிகழ்வு 5-
“தவறாக புரிந்துகொள்வதின் மூலமே உலகம் இயங்குகிறது” என ஒருவர் கண்டடைகிறார். இம்முறையும் அவர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். அதாவது தான் இன்னும் உயிரோடு இருப்பதாக நி…

வெறுமையின் பேரெழில்

Image
தான் தனித்திருப்பதாக காலி அலமாரிக்குத் தோன்றுகிறது.
தனக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருப்பதாய் கற்பனை செய்ய
மறைந்திருப்பவனை தேடுகிறார்கள் மற்ற சிறுவர்கள்.
சிறுவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதால் இது விடுமுறைநாளாக
அலைச்சலுக்கு வழியற்ற ஒருவன் வெறுமையில்
தலை கொதிப்படைந்து போய்நிற்கிறான்.
மூலை இருட்டில் ஒரு மூடிய வாய் போல இருக்கும் காலி அலமாரியைப் பார்க்கிறான்.
அதைத்திறந்து உள்ளே போய் சுருண்டு கொள்கிறான்.
அலமாரியை வெளிப்புறமாக எவரோ பூட்டுகிறார்.

சுந்தர இன்மை

Image
வீதியில் சில நாட்களாக இன்மையை வேட்டையாடுபவனைப் போல திரிகிறது ஒரு பூனை. ஆங்காரத்தில் உள்ளபோது பூனையை நீங்கள் முருங்கை மரத்தில் காணலாம். தனிமையும் வெறுமையுமான மனநிலையில் நீங்கள் இருந்தால் ஒரே சமயத்தில் இங்கேயும் அங்கேயும் உட்கார்ந்து அழுதவாறும் காற்றின் சுழற்பாதைகளை உற்றுபார்த்தபடியும் இருப்பதை காணலாம். தன்னைத்தானே வரைந்துகொண்டு உங்களையும் உலகையும் வரையும் மகத்தான தூரிகை அதன் வால். (அதனால் வரையப்பட்டதுதான் எல்லாமே) தருணங்களில் ஒரு வாள். வெறுமைக்கெதிராக தெய்வங்கள் அற்ப மனிதர்களுக்காக அனுப்பி வைத்த நெளியும் வாள். மின்மினிகள் சிறுசிறு மின்விளக்குகளென தாவரங்களை புதர்களை பைத்தியநிலையோடு அலங்கரிக்கும் நள்ளிரவு.. உங்கள் கதவு தட்டப்படுவது போல இருக்கிறது. திறக்கிறீர்கள் . கனவை கைப்பிடியாக கொண்ட மியாவ் மியாவ் என ஒலியெழுப்பும் ஒரு வாள் கிடக்கிறது.

நளிர்த்துளி போல் ஒர் இரவு

Image
ஏதோ இருளே சிறகசைத்து பறந்து செல்வது போல
ஒரு காகம் புறப்படுகிறது.
ஒட்டுமொத்த உலகையும்
உலுக்கவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும் அசைவின்மை.
கருநீல விசும்பில் விமானம் இட்டுச்சென்ற புகைநெடுஞ்சாலை.
அச்சாலையின் இருமருங்கிலும் நட்சத்திர மரங்கள்.
சற்றே உற்றுப்பார்க்கிறேன்,
ஆ! அங்கே யாரோயொருவர் தன் மகளுடன் நடந்துகொண்டிருக்கிறார்
தான்தான் இப்பிரபஞ்சத்துக்கு வைத்தியம் பார்த்தவர் என்ற மிடுக்குடன்.
அவருக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு
படுக்கைக்குத் திரும்பினேன்.
தம் பாடல்களை சாளரத்தினூடே
அனுப்பி ஆர்ப்பரித்தன பூச்சிகள்.
நானொன்றும் தீவு இல்லை அல்லவா?