நிலாச்சரீரம்
![]() |
Artist: John Atkinson Grimshaw |
அமெரிக்க கவி டெட் கூசர்
அதிகாலை நிலவின் கைப்பிடியைத் திறந்து
அறைக்குள் நுழைந்த சம்பவத்தை
விவரிக்கிறாரே
உனக்கு ஏதாவது தெரியுமா?
என்று வினவியது என் நிழல்.
சிலந்திவலையெனப் பின்னப்பட்டிருந்த நிலவை,
நிலவினின்று வெண்ணிற கயிறு
வீசப்பட்ட திகில் இரவை,
சங்குநிற வெளிச்சம் அலையாக
ஆர்ப்பரித்த ஏகாந்த சமுத்திரத்தை,
காதலன் தொட்டு அவிழ்த்த
பொத்தான் போல தகித்த காம நிலவை,
மலைகளின் கைப்பிடியில் முகம்பார்க்கும் கண்ணாடியாக
நம்மைப் பிரதிபலித்த துய்ய நிலவை என
ஏதேதோ நிலாப் பொழுதுகளை
எத்தனையோ உருவங்களில் கடந்திருக்கிறேன்
எனினும் அந்தவொரு தருணம்...
இன்னமும் மறக்க முடியவில்லை என்னால்,
இதை எழுதும்போதும் பசுமையாக
நினைவுக்கு வருகிறது,
படிக்கட்டுகள்,
அதுவும் அந்தரத்தினின்று படிக்கட்டுகள்,
நிலவொளியாலான எண்ணற்ற படிக்கட்டுகள்...
அன்றுதான் நான் இறந்தேன்.
*
Comments
Post a Comment