நவம்பர் குறிப்பேட்டிலிருந்து


Artist: Clarice Beckett


நவம்பர். காற்றின் சரணாலயத்தில் மாதக் கடைசிநாள்.

தெருவிளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக

ஒளியிழக்கின்றன.

தண்ணீர்த்தொட்டிக்கு அருகே குப்பைக்கூளத்தில்

ஒரு பூனையின் சடலம்.

சுற்றிலும் ஈக்கள். ஈக்கள். ஆயிரக்கணக்கான ஈக்கள்.

                         ***


குப்பைகளுக்கு நடுவே கண்ணாடிச் சட்டகத்திற்குள் ஒரு குடும்பம்.

தந்தை. அன்னை.

அவள் இடுப்பில் அமர்ந்திருக்கும்

குழந்தை மட்டும்

யாரையோ

மிரட்சியுடன் பார்ப்பது போல.

இப்படித்தான்

இந்த குளிர்காலத்தின் காலைநடையில்

நான் பார்க்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால்...

                     ***


சுவரில் சாய்ந்து அமர்கிறேன்

சுவர் தன்னைத்தானே சொறிந்துகொள்வது போலவும்

என்னை ஒரு தூசியைப் போல 

உதறமுயல்வதையும்

உணர்ந்து

சடசடவென

எழுந்து மறைகிறேன்

                         ***


இப்போது அந்தி. சைக்கிளில் பறந்துகொண்டிருக்கிறேன்.

வயல்களில் சூரியனின் கடைசித் தங்கத்தூறல்

மதிலைத்தாண்டி வந்துவிட்ட

ஒரு செம்பருத்தியினுள்ளிருந்து இரவு

அடியெடுத்து வைக்கிறது

முதியவர்கள் நாற்காலியோடு வாசலுக்கு

வருகிறார்கள்

மலைக்கு அப்பால் நிலவின் அறிகுறிகள் பிறகு

சந்தோஷம்.

                         ***


நிலக்காட்சியெங்கும் ஒரு விநோத மெளனம்

ஏதோ என் உடலே நவம்பர் மாத மேகங்களென 

எங்கோ கரைந்துகொண்டிருப்பது மாதிரி

ஓர் உணர்வு

பாதையில் யாருமில்லை

உற்சாக மிகுதியில்

சைக்கிள் பெல்லை இயக்குகிறேன்

(வழிவிடுங்கள் பேய்களே, வழிவிடுங்கள்…)

ஓரிரு கணங்களுக்கு பின்பு

கம்மென்ற அமைதி

சைக்கிள் பெல் நன்கு குளிர்ந்திருந்தது

அதன் உலோகப் பளபளப்பில் ஆகாயம்

நன்றி சாயங்காலமே.

                             ***


வேலிகளை இருளின் அங்கமாக்கும் இரவின் வருகை

தொலைவிலிருந்து பார்க்கையில்

ஏதோ கிணற்றின் வாய் என்பதுபோல

தோற்றமளிக்கும் நேற்று பெய்த மழைத்தேங்கல்

நான் நடக்கும்போது

ஓரிடத்தில்

சிலைத்து நின்று

விட்டுவிட்டு எரியும் தெருவிளக்கை

கோபத்துடன் வெறிக்கிறேன்

ஏதோவோரு அணைந்து ஒளிர்தலின் முடிவில்

இன்னொரு உலகத்தின் நுழைவாயிலைப்

பார்த்துவிட முடியாதா என.

                      ***


"நீ இப்போது எங்கே இருக்கிறாய்?"

"கொண்டாட்ட நாட்களின் சந்தோஷம் போதாத

தெருச்சிறுவர்களால்

விழிகள்

கறுப்புத்துணியால் இறுகக் கட்டப்பட்டு

உடல் எங்கும் பட்டாசு மாலைகள்

வெடித்துசிதற

தெருவில் தாறுமாறாக

ஓடும் நாயின் அலறலுக்குள் இருக்கிறேன் நான்."

                                ***


நைந்து கிழிந்த நம்பிக்கையுடன்

உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன்

வேறுயாருமல்ல நான்

பின்னிரவுகளில் கடும் இருமலால்

சட்டென்று விழித்து சாளரத்துக்கு அப்பால்

உன்னில் நிலைகொள்ளும்

விழிகளின் எஜமானன்

பிரார்த்தனைகளின் கோடைக்காற்றில்

கலையும் தூசித்திரள்

ஒரு மாற்றத்திற்கென இறைஞ்சினேன்

ஆனால் நீ மெளனமாக இருந்தாய் தொடுவானம் போல.

நீ தோற்றுப்போன ஒவ்வொரு இடங்களிலும்

நானிருந்தேன்,

தலைகவிழ்ந்து, அலைகழிந்து,

திணறித்திண்டாடி,

மெளனத்தின் கொடும்வெயிலில் பாதம் வெந்து. 

உன்னை விசுவாசித்ததற்காக

காலாற நடக்கையிலே எனைச் சுற்றிலும்

ஒரு குற்றவாளி கூண்டு விரிந்தது

நிந்தனையாளர்களின் விருந்தில்

கலந்துகொள்ளவும் மறுக்கவில்லையே

என்ன மாதிரியான விசுவாசி நான்

நீ என் குருட்டு நம்பிக்கையா

என் அச்சத்தை மறைக்கும் வண்ணத் திரைச்சீலையா

இந்த உலகத்துக்கு அஞ்சி உன் பின்னால்

மறைந்துகொள்கிறேனா?

விளங்கிக்கொள்ள முடியவில்லை

இப்போதோ நீ மெதுமெதுவாக என்னை இருட்டில்

ஒரு பழைய கலங்கரைவிளக்கமென

நிற்க வைத்திருக்கிறாய்

நான் பார்க்க கப்பல்களை நொறுக்குகிறது புயல்

வழிதவறுகின்றன நிழல்கள்

மூச்சுத்திணறுகிறது பலருக்கும்

சந்தேகமேயில்லை

இது மின்னலின் கரங்களால் ஏற்றப்படவேண்டிய அகல்தான்

குறைந்தபட்சம்

அத்தனைக்கும் மெளன சாட்சியாகத் திகழும்

துரதிருஷ்டத்திலிருந்து மட்டுமாவது

என்னை விடுவி...

                                       ***

Comments

  1. அருமையான கவிதைகள்!

    ReplyDelete
  2. //வயல்களில் சூரியனின் கடைசித் தங்கத்தூறல்// ♥️ அற்புதம்

    ReplyDelete
  3. 1) இது மின்னலின் கரங்களால் ஏற்றப்படவேண்டிய அகல்தான் 2)அதன் உலோகப் பளபளப்பில் ஆகாயம். Superb writing surya 😍

    ReplyDelete

Post a Comment