இறுதியில் யாவுமே தருணங்கள்தானா?

Artist: Harald Sohlberg


1

இருள் தொட்டதெல்லாம் கண் காணாமல் ஆகிவிடுகிறது.

தண்ணீர் தொட்டதெல்லாம் ஈரமாக

வானம் தொட்டதெல்லாம் புரிந்து கொள்ள முடியாததாக..

நான் இருக்கவேண்டும்

கொஞ்ச நேரமாவது

எதையும் தொடாமலும்

இயன்றால் எதனாலும் தொடப்படாமலும்.


2

மின்மினி தாவுகிறது இன்னொரு மின்மினியினுள்.


3

சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது

மனிதர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


4

தவளையின் தலையில்

ஏறிநிற்கிறது

அதன் தலைப்பிரட்டை.


5

இன்னும் கொடுக்கப்படாத ராஜினாமா கடிதம் போல

எல்லாவற்றுக்கும் முன்பு ஒரு கணம் இருந்ததே?

அப்போது மட்டும்

சற்றே சுதாரித்து இருக்க முடிந்திருந்தால்?


6

இறந்தவர்கள் எனது சுமைகளைத் தூக்கிவருகிறார்கள்,

நான் அவர்களைத் தூக்கிக்கொண்டு செல்கிறேன்.


7

துக்கம் — ஒன்றினுள்

இன்னொன்று

அதனுள்

பிறிதொன்று என

எண்ணிறந்த பெட்டிகளை

உள்ளடக்கிய

ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.

மகிழ்ச்சி — சளைக்காமல்

அவற்றை

ஒவ்வொன்றாகத்

திறந்துகொண்டேயிருப்பது.


8

லட்சம் மாலைப்பொழுதுகள்

திரண்டு வந்தது போலும்

ஒரு சாயங்காலம்.

இயற்கையின் மத்திய சிறைச்சாலைக்குள்

தொலைவைப் போல காத்திருந்தேன்

ஒவ்வொன்றிற்காகவும்


9

என் செல்ல அறியவொண்ணாமையே

இத்தகைய சந்திப்புக்குப் பிறகும்

தூல உடலென்றே

எஞ்சியிருந்தால்

எப்படித் தகும்?

ஆறாத புனித ரணமாக இனி நான் இருந்து கொள்கிறேன்

குணப்படுத்தும் கட்டுத்துணியென

என்றென்றைக்கும்

நீ

என்னை

மூடிக்கிடப்பாயா?


10

அமைதியாக இரு

அமைதியாக இரு

இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

நான்

இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.


*


Comments