இரங்கற்பாடல்
![]() |
Artist: Rene Magritte |
பதினேழாம் நூற்றாண்டில் ஒரு மனிதன் மரத்தைப் பார்க்கிறான்.
கண்ணிலடங்காத நிலக்காட்சி அவனைப் பார்க்கின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு மனிதன் மரத்தைப் பார்க்கிறான்.
தெரிவது பறவைகளின் வருகை பதிவேட்டை
நிர்வகிக்கும் ஒரு மரம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு மனிதன் மரத்தைப் பார்க்கிறான்.
கயிற்றுத்தடமுள்ள முறியாத கிளைகள் தென்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் ஒரு மனிதன் மரத்தைப் பார்க்கிறான்.
கிளைகளால் நீச்சலடித்து விண்ணகத்துக்குத்
தப்பிச்செல்ல ஏங்கும் முகபாவத்துடன்
ஏதோவொன்று நிற்கிறது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு மனிதன் மரத்தைப் பார்க்கிறான்.
இல்லை. இல்லவேயில்லை. முந்தைய வாக்கியத்தில்
நிறைய பொய்களை உரைத்ததற்காக நான் வருந்துகிறேன்.
இந்த நூற்றாண்டில்
பார்க்கும் திறனின் முப்பத்திரண்டு பற்களும்
அதல பாதாளத்தால் பிடுங்கப்பட்டுவிட்டது.
இப்போது
வெறுமனே கண்களை திறந்துவைக்கவே இயலும்
அதுவும் புண்கள் போல
*
Comments
Post a Comment