நான்கு குறுங்கட்டுரைகள்- ஆடம் ஜகாயெவ்ஸ்கி



1.கவிதையின் சொல்லப்படாத சிடுமூஞ்சித்தனம் 


கவிதையின் தனிப்பெரும் ராஜ்ஜியமான அக உலகம், அதன் விவரிக்க இயலாத அம்சத்தால் வகைப்படுத்தப்படுகிறது. அது காற்று போல; நிச்சயமாக அங்கு உண்மைகள், பதற்றங்கள், வெப்பநிலை வேறுபாடுகள் உள்ளன ஆனால் அதன் பிரதான சிறப்பியல்பு முழுமையான வெளிப்படைத்தன்மையே. இந்த அக உலகம் தன் விவரிக்க இயலாத தன்மையினால் மேலதிகமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினால் அதை எப்படிச் சாதிக்கும்? அக உலகம் தந்திரத்தைக் கைகொள்கிறது. புற யதார்த்தத்தில் ஆர்வத்துடன் இருப்பதாகப் பாசாங்கு செய்கிறது. ஓ, ஆமாம், புற யதார்த்தத்தில் அவ்வளவு ஆர்வம். ஒரு பெரிய தேசம் வீழ்ச்சியில் இருக்கிறதா? அக உலகம் பரவசமடைகிறது: அதற்கு ஒரு பேசுபொருள் கிடைத்துவிட்டது! மரணம் அடிவானத்தில் தோன்றுகிறது. அக உலகம்— தன்னை அழிவற்றதாக நினைக்கிறது— உற்சாகத்தில் நடுங்குகிறது. யுத்தமா? பிரமாதம். துன்பமா? சிறப்பு. மரங்களா? மிதமிஞ்சி் மலர்ந்த ரோஜாக்களா? இன்னும் சிறப்பு. யதார்த்தம்? மிக நன்று. யதார்த்தம் தெள்ளத் தெளிவாகவே தவிர்க்க முடியாதது; அது இல்லை என்றால், ஒருவர் அதைக் கண்டுபிடித்தாக வேண்டியிருக்கிறது.

கவிதையோ யதார்த்தத்தை ஏமாற்ற முயல்கிறது; யதார்த்தத்தின் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகப் பாசாங்கு செய்கிறது. தெரிந்தே தலையை ஆட்டுகிறது. ஆ! அது சொல்கிறது, மற்றொரு நிலநடுக்கம். மறுபடியும் அநீதி. வெள்ளம், புரட்சிகள். மீண்டும் யாரோ ஒருவர் முதுமை அடைந்துவிட்டார்.

கவிதை தனது ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறது. என்றாவது ஒரு நாள் கவிதையின் இதயம் இரக்கமற்றதாக இருப்பதை யதார்த்தம் அவதானிக்கலாம். அந்தக் கவிதைக்கு இதயமே இல்லை, உள்ளதோ பெரிய விழிகளும் பிரமாதமான செவியும் மாத்திரமே. அப்போது உடனடியாக யதார்த்தம் புரிந்துகொள்ளும்: அந்த விழிகளும் செவிகளும் கவிதைக்கான படிமங்களின் ஆழம்காணமுடியாத தோற்றுவாய் மட்டுமே பின்பு அவை மறைந்துவிடும் என்று. உலகில், கவிதை தனியாக இருக்கும், ஊமையாக, வெறுமையாக, சோகமாக மேலும் தொடர்புறுத்த இயலாததாக.

 

2. இலக்கியத்தின் இரண்டு குறைபாடுகள்


1. ஓர் எழுத்தாளர், தனது பலவீனங்களில், சொந்த வாழ்க்கையில் எனத் தன்னில் மாத்திரம் ஈடுபாடுகொள்ளும்போது புறவயமான உலகத்தையும் உண்மைக்கான தேடலையும் மறந்துவிடுகிறார்.


2. ஓர் எழுத்தாளர், உலகத்தின் உண்மையை, புறவய யதார்த்தத்தை, அறத்தை, மனிதர்களை, தனது காலத்தைப் பண்பாட்டை மதிப்பிடுவது போன்றவற்றில் மட்டும் ஈடுபாடுகொள்ளும்போது, அவர் தனது பலவீனங்களையும் சொந்த வாழ்க்கையையும் தன்னைக் குறித்தும் மறந்துவிடுகிறார்.


3.பரவசமும் முரண்நகையும்


இரண்டு முரண்பாடான அம்சங்கள் கவிதையில் சந்தித்துக்கொள்கின்றன: பரவசம் மற்றும் முரண்நகை. பரவசமான அம்சம், குரூரமானவற்றையும் அபத்தமானவற்றையும் உள்ளடக்கியவாறே உலகத்தை நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளுதலுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மாறாக முரண்நகையோ, சிந்தனையின் விமர்சனத்தின் சந்தேகத்தின் கலாப்பூர்வமான பிரதிநிதித்துவம். பரவசம், உலகம் முழுவதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது; ஆனால் முரண்நகையோ, சிந்தனையை அடியொற்றி, எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது, குறிக்கோள் கற்பிக்கும் வினாக்களை எழுப்புகிறது, கவிதையின் இருப்பை ஏன் தன்னையே சந்தேகிக்கிறது. ஏனெனில் முரண்நகைக்கு உலகம் அவலமும் சோகமுமானது என்று தெரியும்.

இத்தகைய வேறுபட்ட இரண்டு அம்சங்கள் கவிதையை வடிவமைக்கின்றன என்பது பிரமிப்பூட்டுவதும் ஏன் நியாயமற்றதும் கூட. யாரும் கவிதைகளைப் படிக்காததில் ஆச்சரியமில்லை.


4.வெறுமை


யூத ஞானி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார் கவிஞர். ஞானி அவருக்குத் தேநீரையும் பாதாம்களையும் அளித்து, நகரத்தின் காட்சிகளைக் காட்டினார். அப்பார்ட்மென்ட் இருபதாவது தளத்திலிருந்தது; நகரத்தின் அனைத்து நதிகளும் கால்வாய்களும் கிரானைட்டிலிருக்கும் மைக்கா நரம்புகளைப் போல மின்னின. வெம்மையான இலையுதிர்கால நாளாக இருந்தது. தானியங்களால் நிறைந்த கொள்கலனுடன் வளையவந்தன இழுவைப்படகுகள்.

ஞானி கேட்டார் "எதைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களை எதுவோ துன்புறுத்திக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே" 

"ஆமாம்" எனப் பதிலுரைத்தார் கவிஞர். "எனக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகிறது. என்னைத் தொந்தரவூட்டிக்கொண்டிருக்கும் விஷயம்... எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதற்கே சிரமமாக இருக்கிறது.." 

ஞானி தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து, சீராக வெட்டப்பட்ட தனது நகங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

"நான் வெறுமையினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" எனக் கவிஞர் சிறிது நேரம் கழித்துக் கூறினார். "வெறுமை... எழுதவோ ஏன் யோசிக்கக்கூட இயலாத பல நாட்கள் எனக்கு இருந்திருக்கின்றன. கண்டடைதல்களாலும் கனவுகளாலும் செறிந்த அற்புதமான நாட்களும் எனக்கு இருந்திருக்கின்றன, பொக்கிஷங்கள் அத்தகைய நாட்கள். ஆனால், அதற்குப் பிறகு வாரக்கணக்கான மௌனமும் விரக்தியுமே சூழ்கிறது."  

மருத்துவர்களும் மனோதத்துவவியலாளர்களும் மலை வழிகாட்டிகளும் சிரிப்பதைப் போலவே சற்றே தொழில்முறையாகப் புன்னகைத்தார் ஞானி.

"அப்படியெனில் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்" என்றார் ஞானி. "அவ்வப்போது கடவுள் உங்களைச் சந்திக்க வருகிறாரே ! ஒரு வீட்டைக் கற்பனை செய்து பாருங்கள், அங்கு டஜன் கணக்கான வீட்டு உபயோகப்பொருட்கள் இருக்கின்றன. சீனத்து ஜாடிகளுக்கு அருகில் பழங்காலத்தியப் பேழை இருக்கிறது. திரைகளும் திரைச்சீலைகளும் அனைத்தையும் மறைத்துக்கொண்டிருக்கின்றன. அத்தகைய வீட்டுக்குள் ஒளியால் ஒருபோதும் நுழைய இயலாது. நீங்கள் அப்படியல்ல. ஒரேயொரு நாற்காலியைக் மாத்திரமே உடைய விசாலமான அப்பார்ட்மென்டைப் போன்றவர் நீங்கள். அறை நடுவில் நின்றபடி அந்த நாற்காலி காத்திருக்கிறது. ஏனென்றால் அந்த நாற்காலியிடம் நேரம் இருக்கிறது. வெறுமை என்பது எல்லையற்ற பொறுத்திருக்கும் தன்மை. முழுமைக்காகக் காத்திருப்பது. இடையில், விரக்தி மெல்லப் பாடுகிறது, ஒரு ராபின் பறவையைப் போல, பனிப்பொழிவுக்கு முன்பான நவம்பர் மாதத்தில் கூட விசில் அடிக்கும் ஒரு பறவையைப் போல."

00


ஆடம் ஜகாயெவ்ஸ்கி (1945-2021)


போலாந்தைச் சேர்ந்தவர். எளிமையான மொழிதலையும் யதார்த்தத்துடன் ஒளிவு மறைவில்லாத தொடர்பை வலியுறுத்தி, போலாந்தில் உருவாகி வந்த, புதிய அலை இயக்கத்தின் முன்னணிக் கவிஞர். Tremor, Canvas, Mysticism for beginners, Unseen hand என ஐந்துக்கும் மேற்பட்ட கவிதை தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. Solidarity, Solitude (1990), Two Cities: On Exile, History, and the Imagination (1995), Another beauty (2002), A Defense of Ardor (2014), Slight Exaggeration (2017) போன்றவை இவருடைய கட்டுரை நூல்கள். மேலே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் குறுங்கட்டுரைகள், Two Cities: On Exile, History, and the Imagination எனும் நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.

*
நன்றி: நீலம் - பிப்ரவரி 2023

Comments