ரகசிய வாழ்க்கை

Artist: Linda Connor


இப்படி நிகழுமென்று எதிர்பார்க்கவேயில்லை

பேருந்தின் சாளரத்தினோர இருக்கைஊமைவானத்தினின்று

செய்தி வரவேண்டியவனென உட்கார்ந்திருந்தேன்

சடாரென எனைக் கடந்தது இன்னொரு பேருந்து. 

அதன் சன்னலோர இருக்கையில் ஒருத்தி

செளந்தர்யமும் அழிவின் உப்பும் கலந்த ஒரு பேரழகி.

மறுமலர்ச்சிக்கால ஓவியங்களிலிருந்து தப்பிவந்துவிட்டாள் போல.

நான் பார்க்கிறேன் என்பதை அவளும் பார்த்துவிட்டாள்

சட்டென அந்த ஒரேயொரு கணத்தினுள்

பூந்தோட்டமொன்று தோன்றியது

தனிமையில் எங்களது தலைவிதிகள்

சந்தித்துக்கொள்ளட்டுமென.

பிறகு நாங்கள் அலைந்துதிரிந்து

சாகசம் புரிய ஒரு நகரம் துளிர்விட்டுக் கிளைபரப்பியது

இறுதியில் கனிந்தது: பறக்கும்தட்டுகள் அடிக்கடி கடக்கும்

மலையுச்சியில் நான்கு சன்னல் வைத்த வீடொன்று

அங்கே நாங்கள் வசித்தோம் ஆனந்தமும் துக்கமும் என.

சூரிய வெளிச்சம் தித்தித்தது

எனது விழிகளால் அவள் நிலா பார்த்தாள்

பிரார்த்தித்தோம் நிறைய

பிள்ளைகள் பெற்றோம்

கடைசியில் மரங்களைப் போல முதுமையும் அடைந்தோம்

பின், தருணங்களின் சங்கலி அறுபட்டது மெல்ல.

ான் சிகரத்தினின்று எனது வாழ்க்கைக்குள் விழுந்தேன்

அவள் உண்டியலில் இடப்பட்ட காணிக்கை போல எனக்குத் தெரியாத

ஒரு பெயருக்குள் விழுந்தாள்

நாங்கள் அந்நியர்கள் ஆனோம் மறுகணத்தின் கடைவீதியில்.

உலகத்தின் இரைச்சல் கேட்கத்தொடங்கிற்று

செவிக்கு மிக மிகப் பக்கத்தில்

ரத்த நாளங்களில்...

*


Comments