நடனத்தின் முடிவில்



சிறுவயதிலிருந்து எனது கையெழுத்து ரொம்ப மோசம்

இரண்டு வரி நாலு வரி நோட்டுகளால்

பேயோட்ட முயன்றார் எனது தந்தை.

தூரத்தினின்று அம்மா உரையாற்றுவாள் தலையெழுத்தைக் குறித்து

பிறகு எழுதுவேன் விரல்கள் வலிக்க வலிக்க.

அப்புறம் விழுந்தது வருடங்களின் திரைச்சீலை.

இது தட்டச்சு மதத்தின் யுகம்.

ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு

கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.

சிறுவர்கள் பறக்கிறார்கள் மிதிவண்டிகளில்.

அவ்வப்போது எனை மெளனத்திற்குள் எறிகின்றது பில்லியன் கிலோ மீட்டர்

தொலைவினில் மரிக்கும் ஏதோவொரு அண்டம்.

ஆனால், எனது கையெழுத்தோ தவ வாழ்க்கையில்

அதுவும் புரியவொண்ணாமையின் கடற்கரையில் குடிலெழுப்பி.

அதன் ஒவ்வொரு எழுத்துள்ளும் ஒரு வினா:

நான் யார்? எனது பொருள் என்ன?

இவ்வெண்ணிற நிலக்காட்சியினூடே எங்குச் செல்கின்றேன்?

எப்போது தொடங்கிற்று

மோனத்துடனான இந்த மகா யுத்தம்?

யாரால் தீர்க்க இயலும் இவ்விடுகதைகளின் அணிவகுப்பை

ஒருநாள் மொட்டைமாடிக்குச் சென்றிருந்தேன் நாட்குறிப்புடன்.

அங்கமர்ந்து எழுத நினைத்தேன் என்னைப் பற்றி. ஆனால் என்ன எழுத?

'நான்' என்றெழுதி பிறகு அழித்தேன்.

பின்னர் மறுபடியும் ஒரு சந்தர்ப்பவாத 'நான்'.

சற்று யோசித்துக் கிறுக்கினேன் ‘நீ' என்று. அச்சம்.

இப்பொழுது எனது காகிதம் ஒர் அடர்ந்த கானகம்.

எதுவும் நடக்கலாம் அவ்விடத்தில்.

‘நீ' துரத்துகிறது ‘நானை'.

ுட்கள் கிழிக்க, மூச்சிரைக்க, தூரத்து உறுமல்களினூடே ஓடுகிறது 'நான்'.

சரீரமே விழியாகப் பதுங்கிக்கொள்கிறது புதர்மறைவினில்.

சரணடைந்து மண்டியிட நினைக்கிறது ஒருகணம்.

திடுமென ஒர் உந்தம்:

அதற்குத் தெரியும் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டோம்ன்று.

ஆயினும் ‘நான்’ வெளியில் வருகிறது, வெறுங்கையுடன்.

பின்பு நடனமாடுகிறது, தயார் என்பதுபோல.

அப்போது கண்டுபிடித்தேன்:

எழுதும்போதெல்லாம் பாழடைந்த இக் கையெழுத்தின் வடிவில்

காட்சி தந்து,

கவலைப்படாதே

நான் இருக்கிறேன் எனச் சொல்வது

யார் என்று.

*

நன்றி: அரூ இணைய இதழ்


Comments