நழுவும் மணல்

Artist:  Karl Robert Bodek

அறையில் அமர்ந்து, மொசார்ட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். Sinfonia Concertante in E-Flat Major K.364. தோராயமாக, முப்பது சொச்சம் நிமிடம் ஓடக்கூடியது. ஆனந்தம், எதிர்பாராத திருப்பங்கள், மனச்சோர்வு, தோல்வி, பால்யம் என எல்லாமே அந்த இசைக்கோர்வையில் உண்டு. மேலும் இன்றுதான் கவனித்தேன், அநேகமாக, இசையில் மட்டும்தான் எந்தவொரு கணமும் வீணில்லை. ஒவ்வொரு கணமும் முக்கியம் அடுத்தக் கணத்திற்கு. ஒவ்வொரு கணமும் சொல்வதற்கென்று ஒன்றை வைத்திருக்கிறது. அள்ள அள்ள நழுவும் மணல் போல என்று சொல்லலாமா? தூரத்தில் புள்ளியாகப் புலப்பட்டுச் சட்டென இல்லாமலாகும் பறவை போல எனச் சொல்லலாமா? ஏனெனில் சற்று நேரத்தில் இது பௌதீகமாக தீர்ந்துவிடக்கூடியது. அப்புறம் நீண்ட அமைதி. பிறகு ஞாபகத்தின் உலகம். மறுபடியும் கேட்கலாம்தான்; முதல் முறை கேட்ட அனுபவத்தை என்னால் மீட்க இயலாதே?

நிரந்தரமான அழகு... ஒருவேளை அத்தகைய அழகுக்குத் தகுதியில்லாதவர்களா நாம்? 'ஆமாம்' என்கிறது வரலாற்று யதார்த்தம். மதங்கள் 'இல்லை'  என்கின்றன. சமீபமாக நாஜி வதைமுகாம்களில் நிகழ்த்தப்பட்ட இசைக் கச்சேரிகளைக் குறித்து இணையத்தில் படிக்க நேர்ந்தது. கூட்டிசை கச்சேரி நிகழ்த்தும் குழுக்கள் அங்கு இருந்திருக்கின்றன. கைதிகள், கட்டாயத்தின் பேரில், இசையை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள். வதைமுகாம்களில் SS அதிகாரிகள் தினமும் இசை கேட்டார்கள் எனும் நிகழ்வை நினைத்துப் பார்க்கவே எனக்குத் திகைப்பாக இருந்தது.  கொல்லப்படயிருப்பவர்கள் கொல்லப்போகிறவர்களுக்காக இசை கச்சேரிகளை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள்.  இதை எப்படிப் புரிந்துகொள்வது?

இசை, அழகையும் உண்மையையும் அவர்களுக்கு உரைக்கவில்லையா? தீமை, தனது கரங்களால், கலையைத் தொடுகையில், அது ஏன் 'இல்லை' எனச் சொல்வதில்லை? ஆனால் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அத்தனை தீமைகளுக்கும் அலறல்களுக்கும் இடையே இசை அங்கு இருக்கவே செய்தது, இப்போது இருப்பது போலவே. கொலைகாரர்களுடனும் இருந்தது. கொல்லப்பட்டவர்களுடனும் இருந்தது. இசையை மட்டும்தான் மட்டும்தான் அங்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை இன்று நாம் பார்க்கிறோம்.

இடையில், வரலாற்றில், கொடிகள் நிறைய மாறிவிட்டன. எல்லைக்கோடுகள் அழித்து எழுதப்பட்டிருக்கின்றன. இடங்களோ அருங்காட்சியகங்களாக நிற்கப்பழகிவிட்டன. அனுபவங்கள் புத்தகங்களில், நினைவுகளில் வந்து உறைந்துவிட்டிருக்கின்றன. கற்பனை செய்து பார்த்தேன், அப்படிப்பட்ட அழிவில்லாத இசையை, இங்கு அமர்ந்து, கொஞ்ச நேரத்திற்கு முன்பு, நான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சரியப்பட்டுக் கொள்வதா? இல்லை வருந்துவதா? எனக்குத் தெரியவில்லை. சன்னலினூடே குளிர்ந்த காற்று. மேலே சில நட்சத்திரங்கள். இசையின் முடிவில்லாத களங்கமின்மை.

*

Mozart: Sinfonia concertante for Violin, Viola and Orchestra in E flat, K.364

Comments

  1. //அலறல்களுக்கும் இடையே இசை அங்கு இருக்கவே செய்தது, இப்போது இருப்பது போலவே. கொலைகாரர்களுடனும் இருந்தது. கொல்லப்பட்டவர்களுடனும் இருந்தது. இசையை மட்டும்தான் அங்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.//


    🌻🌻❤️

    ReplyDelete

Post a Comment