ஆடம் ஜகாயெவ்ஸ்கி கவிதைகள்

Artist:Elina Luukanen


1

மராத்தான்


பந்தயத்திற்குப் பிறகு,

மராத்தான் வீரர்கள், 

பெருமிதத்துடனும் களைப்புடனும்,

பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பொறிக்கப்பட்ட தொப்பிகளுடன்,

சிகாகோவின் பிரதான வீதியில்

ஒன்றுகூடுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடையாளர்களின் முன்பு

புராதன கதாநாயகர்களைப் போல

அணிவகுத்துச் செல்கின்றனர்,

புகைப்படங்களுக்குச் சந்தோஷத்துடன் நிற்கிறார்கள்,

எண்ணிறந்த மின்னொளிகள்

காற்றை ஒளிரச் செய்கின்றன.

பின் சாயங்காலம் கவிய,

பிரதாபங்கள் மெல்ல ஆவியாக,

எப்போதும் போல அன்பான

நல்நிலவு உதிக்கிறது.

ஆகாசத்தின் ஊதா மேகங்களால் கூட

நமக்கு எதுவும் சொல்ல முடிவதில்லை.

இன்னொரு முறை உலகம் அமைதிகொள்கிறது.


2

சூட்கேஸ்

 

அன்றைய காலையில்

கிராக்கோ நகரம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,

மலைகள் நீராவியில்.

மியுனிச்சில் மழை பொழிந்து கொண்டிருந்தது.

பள்ளத்தாக்குகளில், 

ஆல்ப்ஸ் மறைத்துவைக்கப்பட்டு,

கற்களென அடர்த்தியாக இருந்தது.

ஏதென்ஸில் மாத்திரமே நான் சூரியனைப் பார்த்தேன், 

அது காற்றை

அதுவும் முழு காற்றையும்,

காற்றின் மொத்த திரளையும்

நடுங்கும் தங்கமாக மாற்றிக்கொண்டிருந்தது.

ஆன்மிக எழுத்தாளர்கள் சொல்வது போல:

நான் சட்டென

ஒரு புதிய மனிதன் ஆனேன்.

புலப்படும் இந்த உலகில்

நான் ஒரு சுற்றுலாப் பயணி,

விமான நிலையங்களின் பரந்த வளாகங்களினூடே

சறுக்கும் ஆயிரம் நிழல்களில் ஒன்று—

எனது பச்சைநிற சூட்கேஸ்

விசுவாசமான நாயைப் போல

என்னைப் பின்தொடர்கிறது

சிறிய சக்கரங்களில்.

நான் ஒரு கவனக்குறைவான சுற்றுலாப் பயணி

ஆனாலும் நான் ஒளியை நேசிக்கிறேன்.

 

3

முகங்கள்

 

சாயங்காலத்துச் சந்தை சதுக்கத்தில்

எனக்கு அறிமுகமில்லாதவர்களின் 

பிரகாசிக்கும் முகங்களை நான் பார்த்தேன். 

மனிதர்களின் முகங்களைப் பேராசையுடன் பார்த்தேன்:

ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தது,

ஒவ்வொன்றும் ஏதோ சொல்லியது, அறிவுறுத்தியது, 

சிரித்தது, சகித்துக்கொண்டது.

நான் நினைத்தேன்

நகரம் 

வீடுகளால், சதுக்கங்களால், 

நிழற்சாலைகளால், பூங்காக்களால், 

பரந்த தெருக்களால் ஆனதல்ல என்று 

மாறாக நகரம் 

முகங்களால் ஆனது

விளக்குகளைப் போல ஒளிர்கின்ற 

அல்லது 

ராத்திரியில் 

எஃகினை தீப்பொறிகளால் இழைக்கும்

பற்றவைப்பவர்களின் தீக்கம்பிகளை போன்ற 

முகங்களால் ஆனது

 

4

கணங்கள்

 

தெளிந்த கணங்கள் மிகக் குறுகியவை.

அங்கு மேலதிக இருள் உண்டு.

நிலத்தை விடக் கூடுதலான கடல் உண்டு.

உருவத்தை விடக் கூடுதலான நிழல் உண்டு.

 

5

பூமி

 

சிலர் போலிஷ் மொழியில் பேசுகிறார்கள், 

சிலரோ ஜெர்மனில் பேசுகிறார்கள்,

ஆனால் கண்ணீர் மட்டுமே 

உலகப்பொதுமையானதாக இருக்கிறது.

புண்கள் ஆறுவதில்லை, 

அவற்றிற்கு இருக்கின்றன மிக நீண்ட நினைவுகள்.

நிலக்கரி மின்னுகிறது எப்போதும் போல.

 

யாரும் இறக்க விரும்புவதில்லை ஆனால் 

வாழ்க்கையோ சரிக்கட்ட இயலாததாக.

அவ்வளவு விசித்திரங்கள் ஆனால் 

விசித்திரங்கள் பேசுவதில்லையே.

சுற்றுலாப்பயணிகள் போல நாம் வந்திருக்கிறோம்

சூட்கேஸ்களுடன் —

நாம் தங்கியிருந்தோம்.

 

இந்தப் பூமியைச் சேர்ந்தவர்களில்லை நாம் 

ஆயினும் அது நம்மை வரவேற்றது 

திறந்தமனத்துடன்—

உங்களிருவரையும் கூட அது வரவேற்றது.

 

6

முதிய மார்க்ஸ்

 

அவரால் சிந்திக்க முடியவில்லை.

லண்டன் ஈரத்தன்மை மிக்கது,

அதன் ஒவ்வொரு அறைகளிலும் 

யாரோ ஒருவர் இருமிக்கொண்டிருக்கிறார்.

அவர் ஒருபோதும் குளிர்காலத்தை விரும்பியதேயில்லை.

அவர் தன் பழைய கைப்பிரதிகளை 

மறுபடியும் மறுபடியும் திருத்தி எழுதுகிறார் ஆர்வமற்று.

மஞ்சள் காகிதமோ உடையக்கூடியதாக இருக்கிறது நுகர்வைப் போல.

வாழ்க்கை ஏன் பிடிவாதமாக 

அழிவினை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது?

ஆனாலும் சொப்பனத்தில் வசந்தம் வந்துவிடுகிறது,

அறியப்பட்ட எந்த மொழியாலும் பேசாத பனியுடன்.

அவருடைய அமைப்பிற்குள் காதல் எங்குப் பொருந்துகிறது?

நீலப்பூக்களை நீங்கள் எங்கு காணயியலும்.

அவர் அரசின்மைவாதிகளை வெறுத்தார்.

லட்சியவாதிகள் அவருக்குச் சலிப்பூட்டினர்.

அவர் ருஷ்யாவிலிருந்து 

மிக விரிவான அறிக்கைகளைப் பெற்றார்.

பிரெஞ்சுக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருந்தார்கள்.

போலாந்து பொதுவானதாகவும் அமைதியிலும் இருந்தது.

அமெரிக்கா வளர்வதை நிறுத்தவேயில்லை.

இரத்தம் எல்லா இடங்களிலும் இருந்தது.

முகப்புப்படத்தை மாற்ற வேண்டுமாய் இருக்கலாம் 

கண்காணாத கடவுளை நோக்கி

உள்ளூர் பைத்தியக்காரி 

தனது முஷ்டியை அசைத்துக்காட்டுவது போல 

அவர் சந்தேகிக்கத் துவங்குகிறார்

முதிய பூமியெங்கும் 

மனித இனத்திற்கு 

எப்போதுமே சிரமப்பட்டுத்தான் நடக்க நேரிடுமோ என.

 

7

தேடல்

 

சிறுவனாகவும் வாலிபனாகவும்

முப்பது வயது முதிர்ந்தவனாகவும் நானிருந்த 

எனது நகரத்துக்குத்

திரும்பிச் சென்றேன்.

நகரம் என்னை அலட்சியமாக வரவேற்றது.

ஆனால் தெருக்களின் 

ஒலிபெருக்கிகள் கிசுகிசுத்தன:

நெருப்பு இன்னமும் எரிந்துகொண்டிருப்பது 

உனக்குத் தெரியவில்லையா,

ஜுவாலையின் உறுமல் 

உனக்குக் கேட்கவில்லையா ?

வெளியே போ.

இன்னொரு இடத்தைத் கண்டுபிடி.

அந்த இடத்தைத தேடிச் செல்.

உனது உண்மையான தாயகத்தைத் தேடு.

 

8

வாகனக் கண்ணாடி

 

பின்காட்சி ஆடியில்

திடீரென ப்யூவாஸ் தேவாலயத்தின் 

பெரும் பகுதியைப் பார்த்தேன்

பெரிய விஷயங்கள் சிறியவற்றில் 

வசிக்கின்றன

ஒரு கணமேனும்.

 

**

நன்றி: தமிழ்வெளி இதழ் - 02

 

 


Comments