"எது பேச முடியாததாக இருக்கிறதோ அது ஒருவகையில் இருள்தான்"

Artist:Karen Hollingsworth


நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஏற்புரையை ஒரு கவிதையுடன் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.


//ஒருவர் இறந்துபோனால்

மீதமுள்ள உலகம் அப்படியே இருக்கிறது

ஒருமாற்றமும் இல்லை

மீதமுள்ள உலகம் அவருக்கு

அணைந்து போனது தவிர்த்து

ஒருமாற்றமும் இல்லை

மீதமுள்ள உலகம்

அப்படியேதான் இருக்கும்

என்பதைக்

கொஞ்சம் முன்னதாக

அவர் தெரிந்திருந்தால்

மீதமுள்ள உலகத்தில்

அவர் நீடித்திருக்கவும் கூடும்

இன்னும் சிறிது நாட்கள்

மாதங்கள்

ஆண்டுகள்

மொத்தத்தில்

மீதமுள்ள உலகத்தில்

இருப்பவர் நாம் இல்லையா

பல்லியின் வால் போல

இழந்த உலகின் ஒருபகுதிதான்

இந்த மீதமுள்ள உலகம் இல்லையா//


லக்ஷ்மி மணிவண்ணனின் இக்கவிதையுடன் எனக்கு ஒரு முழு ஆமாம் உண்டு. ஒருவர் இறந்தபின் யாவும் அப்படியே இருக்கின்றன என்ற வியப்பை நானும் அடைந்திருக்கிறேன். நான் நேசித்த பெண்ணின் அகால மரணத்திற்குப் பின்பு குறைந்தபட்சம் கல்லூரி விடுதி அறையின் சன்னலுக்கு வெளியே தெரியும் தூரத்து மலை முற்றாக அழிந்துவிட வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால் அது அப்படியே இருந்தது எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல. 

நண்பர் வே.பாபுவை மிகக்குறைவான முறைகளே பார்த்திருக்கிறேன். தனிச்சந்திப்புகளும் அல்ல அவை. நான் அதற்கு முன்பாக அவருடைய கவிதைகளைப் படித்திருந்தேன். நண்பர்கள் அவ்வப்போது அவரைப் பற்றிக் சொல்லிக்கேட்டிருக்கிறேன். சேலம் சிவா லாட்ஜில் நண்பர்கள் சூழ இருக்கும் புகைப்படங்களைச் சிறு ஏக்கத்துடன் பார்த்ததுண்டு.. ஆனால் கவிதைகள் வழியே உருவாகிவரும் உறவு வெளியிலிருக்கும் உறவை விட வலிமையானது போலும். 

அநேகமாகக் கவிதைகளில் லெளகீகத்துடனும் சுரீர்தன்மையுடனும் அவர் பராமரித்து வந்த உறவு என்னை நிரம்ப வசீகரித்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. லெளகீகத்துடன் ஒட்ட இயலாமல் நான் தவித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. நண்பர் பாபுவின் மரணத்திற்குப் பின்பு நான் அடைந்த உணர்வும் கிட்டத்தட்ட மணிவண்ணனின் கவிதை பகிரும் உணர்வைத்தான். யாவும் அப்படியே தொடர்வது குறித்து வியப்பும் துக்கமும் எனக்கு இருந்தது, இருக்கிறது. நண்பர் வே.பாபுவை இந்நேரத்தில் நான் நினைத்துக்கொள்கிறேன்.

*

என்னைப் பற்றிப் பேசுவது போல வேறொன்றைப் பற்றிப் பேசிப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். 

நண்பர்களே… இரண்டு நாட்களுக்கு முன்பு,  சாமுவேல் பெக்கெட்டின் தொடர்ச்சி எனக் கருத வாய்ப்பளிக்கக்கூடிய, ஸ்வீடிஷ் இயக்குநர் ராய் ஆண்டர்சனின் "Songs From The Second Floor" திரைப்படத்தைப் மறுபடியும் பார்க்க நேர்ந்தது. மானுட வாழ்வின் போதாமைகளை, அபத்தங்களை, மகத்துவங்களைக் கவித்துவமான முறையில் காட்சிப்படுத்துபவர் என அவரைச் சொல்ல இயலும். திரைப்படத்தின், ஓரிடத்தில் இப்படியொரு காட்சி வருகிறது, சாம்பல் புழுதியும் சோகமும் கப்பிய முகத்துடன் ஒரு கதாபாத்திரம் நம்மைப் பார்த்து இவ்வாறு அறிவிக்கிறது:  மனிதனாக இருப்பது அவ்வளவு எளிமையானது இல்லை என. 

பின் கணினியை அமர்த்திவிட்டு நடைக்குக் கிளம்பிவிட்டேன். அந்த ஒற்றை வரி ஒரு ஆள் போலக் கூடவே வந்து கொண்டிருந்தது. இதை எழுதிக்கொண்டிருக்கையில் தோன்றுகிறது, நான் திரும்பத்திரும்ப அந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதும் அந்த ஒற்றை வரியைக் கேட்பதற்காகத்தான் என்று.

வழியில், மாலையின் விநோத அழகை, திட்டுத்திட்டாக இருள் பரவிக்கொண்டிருப்பதை, செம்பருத்திகள் சிவப்பை விடவும் சிவப்பாகி வருவதை, பறவைச்சப்தங்கள் கூடுகளுக்குத் திரும்புவதை, நீர்நிலைகள் இருண்டு வருவதை  எல்லாம் பார்த்தேன். பின் சாலையோரத்தில் அமர்ந்து வருவோர் போவோர் யாவரிடமும் கையேந்தும் ஒருவரையும் பார்த்தேன். பேருந்து நிலையத்தினுள் நுழைந்தேன். கைவிடப்பட்ட குழந்தைகளையும் நோயாளிகளையும் பார்த்தேன். அவர்களைக் கடந்து செல்லும் அழகு குடியிருக்கும் யுவதிகளையும் பார்த்தேன். எனக்கு ஜப்பானிய ஜென் கவி கோபயாஷி இஸாவின்

//இவ்வுலகில்

நாம் நடக்கிறோம் நரகத்தின் கூரைகளில்

மலர்களை வெறித்தபடியே.//

என்ற சிறுகவிதை நினைவுக்கு வந்தது.

மனிதனாக இருப்பது அவ்வளவு எளிமையானது இல்லை என்பதற்கான பதில் இது என்று நினைத்துக்கொண்டேன்.

*

எனக்கு கவிதை அறிமுகமான காலத்தில் இருள் மீது ஒரு பிரேமை இருந்தது. கவிதையை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இருள் என்றுதான் நினைக்கிறேன். ஆரம்பத்தில் ஆறுதலைத் தேடித்தான் மொழியைக் கையாளத் தொடங்கினேன். இப்போதோ தொலைவை. எது பேச முடியாததாக இருக்கிறதோ அது ஒருவகையில் இருள்தான். இருளை, துக்கத்தை, நோயைப் போற்றுவதுதான் என் கவிதையின் பணி என்று கூட அப்போது நினைத்திருக்கிறேன்.

கழிவிரக்கம் போலத் தொனிக்க வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் நான் சொல்லவேண்டும், இழப்புணர்ச்சி, அனாதரவு அதன் தொடர்ச்சியாகக் கூடிவந்த ஒரு அந்நியத்தன்மை இதெல்லாம் அச்சூழலுக்கு உறுதுணையாகவே இருந்தன என்று. நான் அவற்றாலேயே கொஞ்சம் காலம் சீராட்டி வளர்க்கப்பட்டேன். எனது ஆசிரியர்கள் அவர்கள். வகுப்பறைக்குள் இருக்கையில் சன்னலுக்கு வெளியே எண்ணம் அலைபாய்வதைப் போல ஒளிக்கான ஏக்கம் நிறைய இருந்தது. நோய்க்கோ முடிவிருப்பதாகத் தோன்றவில்லை. என்றாலும்கூட எனக்குத் தோன்றியது, தோன்றுகிறது, சொற்களினூடாக நான் எப்போதும் மருந்துகளைத்தான் தேடிவந்திருக்கிறேன் என்று.

ஆனாலும் நான் இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும், எனக்குத் துக்கம் தேவைதான். அதன் துணையில்லாமல் என்னால் இருக்க முடியுமா என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் இறுதியில் அதனூடாக நிகழவிருக்கும் விபத்தையும்தான் கண்டுபிடித்துவிடுகின்றன. அது திகைப்பளிக்ககூடியதாகவும் இருக்கிறது. இருளை ஒரு மனப்பாடச் செய்யுளைப் போல மனனம் செய்ய வேண்டியிருக்கிறது. துக்கம் முற்ற வேண்டியிருக்கிறது. பின் அதுவே அமிர்தமாகிவிடுவதை நான் அனுபவம் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்புறம் நான் வேறு ஆள். இன்னொரு பிறப்பு, வேறு வாழ்க்கை தொடங்குகிறது அங்கே. 

நான் ஒரு முறைதான் பௌதீகமாகப் பிறந்திருக்கிறேன் என்றாலும் அதற்குள்ளாகப் பல முறை புதிதாகப் பிறப்பது என்ற அம்சத்தில் ஏக்கம் கொண்டவனாக இருக்கிறேன்.  அதற்கான கருவியாக இப்போது என் கைவசம் கவிதையே இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு, ஒவ்வொன்றையும் அவதானித்து காண்பதினூடாக யாவற்றையும் போற்றிக்கொண்டு, பரிபூரண சுதந்திரத்துடன், உலகங்களை எழுப்பி அழித்து, எண்ணிலா ஆட்களாகி, பொருட்களாகி, அன்றாட வாழ்க்கையை உன்னால் வாழ்ந்துவிட இயலும் எனக் கவிதையே சொல்லித்தந்தது.

நண்பர்களே... கவிதைதான் நாம் தனியாக இல்லை வெறுமனே தொலைவிலிருக்கிறோம் என்று நினைவூட்டும் மகத்தான பணியையும் செய்துவருகிறது . தத்துவவாதிகளும் மறைஞானிகளும் ஓயாது தேடிக்கொண்டிருக்கும், ஏழு மலை ஏழு கடலுக்கு அப்பாலிருக்கும் அறியப்படாததின் குகையினுள் சாவகாசமாக நம்மை அழைத்தும் செல்கிறது.  

அவநம்பிக்கையும் ஓலமும் சூழ்ந்த இக்காலகட்டத்தில் நமது எளிய வாழ்க்கைக்கு கவிதைத்தன்மை கூடவேண்டும் என இத்தருணத்தில் நான் வேண்டிக்கொள்கிறேன்.

*

எனது கவிதைகளைக் குறித்துப் பேசிய ப்ரிய நண்பர் ஷங்கர்ராம சுப்ரமணியனுக்கும், வாழ்த்துச்சொல் அளித்த கோணங்கிக்கும், எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கும், இவ்விருதை எனது கவிதைகளுக்கு அளிக்கும் தக்கை நண்பர்களுக்கும் என் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


[தக்கை வே.பாபு நினைவு விருதை முன்னிட்டு, ஏற்புரையாக வாசிக்கப்பட்ட கட்டுரை  ]


Comments

Post a Comment