பேரரளி மலருக்கு -ஜியோங் ஹோ-சியுங்




அழாதே.
தனியாக  இருப்பதே மனிதனாக இருப்பதற்கே.
ஜீவித்திருப்பது என்பதே தனிமையைச் சகித்துக்கொள்வதற்காகவே.
ஒருபோதும் வராத அலைபேசி அழைப்புக்காக வீணாக காத்திருக்காதே.

பனி பெய்யும்போது, பனிப்பாதைகளில் நட,
மழை பொழியும்போது, மழைப்பாதைகளில் நடந்து செல்.
நாணல்களின் படுக்கையிலிருந்து உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது கறுத்த மார்புடைய ஒரு லாங்பில் பறவை.

சிலநேரங்களில் கடவுளும் மிகத்தனியாக இருக்கிறார், அழுகிறார்.
பறவைகள் தனியாக இருப்பதால் கிளைகளில் அமர்கின்றன
நீ தனியாக இருப்பதால் நீரோடைக்கு அருகில் அமர்ந்திருக்கிறாய்.

நாளைக்கொரு முறை கிராமத்திற்கு வருகிறது மலையின் நிழல்,
ஏனெனில் அதுவும் கூட தனியாக இருக்கிறது.
மணியொன்றின் ஓசை எதிரொலிக்கிறது,
ஏனெனில் அதுவும் கூட தனியாக இருக்கிறது.

*

ஜியோங் ஹோ-சியுங் (Jeong Ho-seung )
தென் கொரியக் கவிஞர். Sorrow to joy, Dawn letter என பத்திற்கு மேற்பட்ட தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

Comments