சிருஷ்டி கீதம்

Artist: Hiroshi Sugimoto

அப்போது இன்மை இருக்கவில்லை
இருப்பும் இருக்கவில்லை
உலகமோ
அதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லை
மறைந்து நின்றது என்ன?
எங்கே?
எவருடைய பாதுகாப்பில்?
அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ?

அப்போது மரணம் இருக்கவில்லை
நித்தியத்துவம் இருக்கவில்லை
ராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லை
ஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றி
சொந்த வலிமையினால்.
அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை.

ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்தது
வேறுபடுத்தயியலாமையால்
யாவும் நீராக இருந்தது
அதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்தது
அதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்தது
மனதின் ஆரம்ப விதை அதுதான்
இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்
தங்கள் ஞானத்தினால்
இன்மையில் இருப்பைக் கண்டனர்.

அதன் ஒளிக்கதிர்கள் இருளில் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது என்ன?
கீழிருந்தது என்ன?
பிறப்பிப்பவை இருந்தன
மகத்தான சக்திகள் இருந்தன
ஆற்றல் கீழிருந்தது
அளிப்பது மேலிருந்தது.

உண்மையில் யார் அறிவார்?
அதை யாரால் சொல்ல முடியும்?
எங்கிருந்து தோன்றியது அது?
எங்கிருந்து உருவானது சிருஷ்டி?
தேவர்களோ படைப்பிற்குப் பின் தோன்றியவர்கள்
அப்படியானால் அது எப்படி உருவாயிற்று?
யார் அறிவார்?

யார் அதை உருவாக்கினார்கள் அல்லது யார் உருவாக்கவில்லை?
அப்பாலான ஆகாசத்திலிருந்து
இதைக் காணும்
அவனே அறிவான் அல்லது அவனும் அறியான்.
000

சில குறிப்புகள்:

1) சிருஷ்டி கீதம் என்று அழைக்கப்படும் இக்கவிதை ரிக்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சூக்தம். எப்படிப் பிரபஞ்சம் உண்டானது? ஒன்றுமின்மையிலிருந்து எப்படி ஒன்று தோன்றி வந்திருக்க முடியும்? ஒன்றுமின்மை என்று ஒன்று இருக்கும்போது எப்படித் துவக்கம் இருக்கமுடியும்? போன்ற அடிப்படை கேள்விகளை வியப்பும் புகைமூட்டமுமாக எளிமையின் பயங்கரத்துடன் கூறும் கவிதை.

2) மொழிபெயர்ப்பு என்று வரும்போது இக்கவிதைக்கு ஏழெட்டு மொழியாக்கங்கள் இருக்கின்றன. மாக்ஸ் முல்லர், வெண்டி டோனிகர் என புகழ்பெற்ற இந்தியவியல் அறிஞர்கள் எண்ணற்ற பாடபேதங்களுடன் மொழியாக்கம் செய்திருக்கின்றனர். தமிழில், ஜெயமோகன் சிருஷ்டி கீதத்தை ஏற்கனவே மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் இந்தக் கவிதை அளித்த ஒரு அந்தரங்கமான அனுபவத்திற்காக இதை மீண்டும் மொழியாக்கம் செய்திருக்கிறேன். ஒருவகையில், கவிதையை மொழியாக்கம் செய்வது என்பதே அக்கவிதையை இன்னும் நெருக்கமாக நெருங்கிச்செல்வதுதான் என்று தோன்றுகிறது. ஒரு அறையினுள் நுழைவது போல சொற்களினுள் நுழைவது!. .

3) சிருஷ்டி கீதம்- பத்து மொழியாக்கங்கள்