கபாலம் ஒரு மலர்மொட்டு [சிறுகதை]







1

ரயிலை எங்கள் வளர்ப்புப்பிராணியென்றே நினைத்திருந்தோம். ஆனால் அது எங்களை இப்படி வஞ்சிக்குமென்று தெரிந்திருக்கவில்லை. நாட்கள் திவங்க திவங்க ஓடிக்கொண்டிருக்கின்றன. காலத்தின் முகத்திலின்று ஒரு இனம்புரியாத பயம் தொற்றியிருக்கிறது. நம்பிக்கையென்பது ஒரு காலத்தில் எங்களுக்குச் சூரியனாக இருந்தது. இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இப்போது நாங்கள் வாழ்வதற்கும் புதிதாகப் பிறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும். அதற்குத் தடையில்லை.  ஒவ்வொரு ரத்த நாளமும் தன் கனவில் மருத்துவமனை படுக்கையில் கிடந்து வலியால் தேம்பும்வரை வேலை செய்தாகவேண்டும். இங்கு வருவதற்கு முன் அழகான படுக்கைகளில் மதுவிடுதிகளில் எவ்வளவோ ஓய்வு எடுத்திருக்கிறோம். எங்கள் நரம்புகளில் மகிழ்ச்சியின் தாங்கமுடியாத எடையை உணர்ந்திருக்கிறோம். விடுதலையின் மார்புகச்சைகளுக்குள் முகம் புதைத்துத் தூங்கி அழுதிருக்கிறோம். இப்பொழுதோ வாழ்க்கை வயோதிகத்தை நோக்கி வற்புறுத்தித் தள்ளப்பட்டதை எங்களில் பலரும் உணர்ந்திருந்தனர். டெலிபோன் டையரியின் பக்கங்களைத் திரும்பத்திரும்ப புரட்டுவது போல இளமையையும் வயோதிகத்தையும் ஓய்வின்றிப் புரட்டவேண்டியிருந்தது.

இவற்றிற்கு மத்தியிலும் அவன் மீது துயரச்சோர்வின் சாயலேதும் படியவில்லை. அவன்  அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியும் அவனாகவே இருந்தான். ஒவ்வொருமுறை காணும்போதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனைப் பைத்தியம் என்றும் சொல்கிறார்கள். அப்படித் தோன்றுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நானும் அவனும்தான் நண்பர்கள். ஒருதலை நண்பர்கள். அவன் யாரோடும் பழகுவதில்லை. ஏதோவொரு இலை மற்றொரு இலையை உரசாமல் காற்றில் சலசலத்துக்கொள்வது போல இருந்தது அவனுடனான என்னுடைய உறவு. இரண்டு முறை என்னை உடலுறவுக்கு அழைத்தான். தயக்கம். அநேகமாகப் பயமாகத்தான் இருக்கும். முகாமில் அதிகாரிகளுக்குத் தெரியாத ஒரு சில மறைவிடங்கள் இருக்கின்றன. அது இல்லை எனில் எனது நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்கும். அருவருக்கத்தக்க சீருடை ஒன்றை எல்லோரும் அணிந்திருந்தோம். தலைமுடியை மழித்துவிட்டார்கள். ஒருவகையில் இம்முகாமே ஒரு தேசம் போலயிருந்தது. நாங்கள் எல்லோரும் அதனுடைய பிரஜைகள். எல்லையைக் கூட மின்வேலியால் நெய்திருந்தார்கள். கண்காணிப்பு கோபுரங்கள் ஏராளமாக நின்றுகொண்டிருந்தன.
இங்கு ரொட்டி தான் எல்லாம். ஏற்கனவே இங்கிருந்தவர்கள் சொல்லியிருந்தார்கள். நீங்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் சவரம் செய்து உங்களை இளமையான தோற்றத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உடல் வலுவுள்ளது போல் பாவனை செய்யுங்கள், இல்லையென்றால் விஷப்புகையைச் சந்திக்க நேரிடும். உங்கள் ரொட்டியில் பாதியைக் கொடுத்தால் பதிலுக்குச் சவரம் செய்ய கண்ணாடித்துண்டை தருகிறோம். முடிந்தவுடன் திருப்பித்தந்துவிடவேண்டும். நாங்கள் ஒருமாதிரியாகக் குழப்பத்துடன் ஆமோதித்தோம். ஏற்கனவே கையில் குத்தப்பட்ட எண்களால் ஏற்பட்ட வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ரொட்டி விநியோகத்திற்குப் பிறகு காலையில் ஒலிப்பெருக்கியில் சப்தம் கேட்கும். நாங்கள் எல்லோரும் வேலை செய்யப்போவோம். அவனும் என்னுடன்தான் வேலை செய்துகொண்டிருந்தான்.

முகாமிற்குள் இன்னொரு கூடாரத்தை நிர்மாணிக்கப் பணிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் கட்டிடங்கள் கட்டுவதைச் சார்ந்து திறமை உள்ளவர்களெனப் பதிவுசெய்திருந்தோம். வரிசையாக அங்கே போவோம். வேலை செய்வோம், வேலை செய்வோம். சட்டை முழுவதும் மழையில் நனைந்ததுபோல வியர்வையில் நனைந்திருக்கும். இவ்வியர்வைக்கும் குருதிக்கும் உள்ள வித்தியாசம் அதனுடைய நிறம் மட்டுமேயென்பதை எவரும் சொல்லிவிடுவர். ஆனாலும் வேலை செய்துகொண்டேயிருப்போம். ஓய்வெடுத்தால் உடனடியாக மரணத்தின் கண்கள் அடையாளம் கண்டுவிடும். துப்பாக்கிகள் சில சமயம் தானாகவே எங்களைச் சுடும். தலையில் சுடப்பட்டால் மற்றவர்களுக்குக் கூடுதல் வேலை. சிதறிக்கிடப்பவற்றை அப்புறப்படுத்தவேண்டும். இவ்விவகாரங்களில் அவன் மிகவேடிக்கையாக நடந்துகொள்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். கையை முதலிலியே துடைத்துவிட்டு சிதறிக்கிடக்கும் பாகங்களை அள்ளியெடுத்து பைக்குள் கொட்டுவான். ஏன் அப்படிச் செய்கிறாய் என ஒருமுறை கேட்டேன். உடலென்பது எண்ணங்கள். அப்படியே தொட்டால் பரவிவிடும் என்றான். எனக்குச் சிரிக்கவேண்டும் என்பது போலிருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அவனுக்கு மட்டும் ஒருவிதமான நளினமான அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒருமுறை பாறைகளைத் தூக்கிச் செல்லாமல் சும்மா நின்றுகொண்டிருந்தான். அதிகாரி அதைப் பார்த்துவிட்டார். அவனைக் கீழே இறங்கி வரச்சொல்லிக் கத்தினார். அவனும் போனான். நல்லவேளையாக அந்த அதிகாரி துப்பாக்கியால் சுடுவதைத் தவிர்த்துவிட்டார் ஆனால் பூட்ஸ் கால்களால் நெஞ்சில் மிதித்து முதுகைத் தொட்டுவிட்டார். என்னால் பார்க்க முடிந்தது வலி ஒரு பைத்தியம் பிடித்த போர்விமானமென அங்கு வட்டமிடத்தொடங்கியதை. ஒருவனால் எவ்வளவு சப்தமாகக் கத்த முடியுமென்பதை இதுபோன்ற நேரங்களில் மட்டுமே மற்றவர்களால் பார்க்க முடிகிறது. வலிக்கு அவ்வப்போது மனித உடல் கிடைக்குமென ஆரம்பக் காலங்களில் அவன் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இப்போது அவன் வலியா அல்லது அவனாகவே இருக்கிறானா என்று குழப்பம் ஏற்பட்டது. அந்த அதிகாரி சற்றுதூரமாகப் போய் நின்றுகொண்டார். இது வாடிக்கையாக இங்கு அடிக்கடி நடக்கிறது.

அந்த அதிகாரியின் கண்களைப் பற்றிச் சரியாகச் சொல்வதென்றால் தொழிற்சாலையின் கழுவப்படாத இயந்திரங்களை ஞாபகப்படுத்தியது. ஏனென்று தெரியவில்லை. அவர் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நிறைய வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறார். அவருடைய துப்பாக்கி மட்டுமே இங்கு ஒரு முப்பதுக்கும் மேற்பட்டவர்களைச் சுட்டிருக்கும். புதிய ஆட்கள் கொண்டுவரப்பட இருப்பதாகத் தகவல் கிடைத்தால் அது இன்னும் உற்சாகமடைந்து கொள்ளும். ஒரேநாளில் கூட பத்துபேரைக் கொன்ற கதையும் அதற்கிருக்கிறது. சிறுவர் சிறுமிகள் தங்கியிருக்கும் பகுதியில் தவளையாக மாறும் இளவரசன் கதை வேறுவிதமாகக் திரிந்து கிடந்தது. தவளையாக மாறும் துப்பாக்கியென்று  கதைசொல்லிக் கொண்டிருந்தார்கள்.  பிணங்களையும் சிதறிய உடலையும் தீயில் போடுவதற்காகத் தள்ளுவண்டிகள் இருந்தன. என்னை வரச்சொல்லிக் கத்தினார். இம்முறை நீதான் என்றார். உடனே ஓடி ஓடி அப்பகுதியில் கிடக்கும் பிணங்களையும் சிதறிக்கிடப்பவற்றையும் எடுத்து தள்ளுவண்டியில் கொட்டினேன். என் ரத்தம் தானோ என எண்ணும் அளவுக்கு கை மற்றும் சீருடையில் சிவப்பு படர்ந்திருந்தது.

இன்னொரு அதிகாரி அங்கு வந்தார். பிணங்களை எரிக்கின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார். எரியும்போது ஓடிச்சென்று உள்ளே விழுந்துவிடலாமா எனத்தோன்றும். அதற்குள் என்னைச் சுட்டுவிடுவாரே என எனக்குள் சொல்லிக்கொண்டேன். புகையாகவும் சாம்பலாகவும் மாறுவதொன்றுதான் இங்கிருந்து தப்பும்வழி. இன்னொரு வழியும் இருக்கிறது அது வேலியை நோக்கி ஓடுவது. ஒன்று சுடப்படுவோம் இல்லையேல் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறப்போம். தன்னைத்தானே அழித்துக்கொள்ள இங்கே அனுமதிப்பதேயில்லை. ஏனெனில் வேலை சோர்வடைந்துவிடும். சோர்வடைந்தால் பொருட்கள் வெளியே போகாது. போகாவிட்டால் வெளியே எஞ்சியிருக்கும் எங்களை இதுபோன்ற முகாம்களுக்கு கொண்டுவர முடியாது. தீ எரிந்து கொண்டிருந்தது. தேடியது கிட்டியபின்னும் தேடல் தேடலாய் தொடர வழியேதும் உண்டா என அது கேட்பது போலிருந்தது. தூரமாக நின்றபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிணவெரி புகைக்கு மூக்கு தன்னளவில் பழகிவிட்டது. சாம்பல்தான் பிரச்சினைக்குரிய பொருள். அதிகாரி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். மறுபடியும் பழைய இடத்திலேயே கொண்டுபோய் விட்டார். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். வேலை செய்து கொண்டேயிருந்தோம். வெயில் சோகமான தீவிரத்துடன் கவிந்து கொண்டிருந்தது. வானத்தில் மேகங்களே இல்லை.


2

பனி. பனி. எங்கெங்கும் பனி. அதை வெட்டியபடி ராக்கெட்டைப் போலப் புகைக்கூண்டிலிருந்து விண்ணுக்குச் சீறியது புகை. அனுமானிக்கமுடியாத இரவின் ஆளுகை. துருப்பிடித்த கதவின் இடுக்கு வழியே அவன் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென தனக்குத்தானே எதையோ மறுபடி மறுபடி பிதற்றிக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு மனிதனைப் போல விசில் சப்தம் நெருங்கிக் கொண்டிருந்தது. சட்டென ஓடிவந்து தன் படுக்கையில் படுத்துக்கொண்டான். என்னே நடிப்பு. கதவைத் திறந்தபடி ஒரு அதிகாரி வந்தார். விசில் சப்தம். நாங்கள் மெதுவாக எழுந்தோம். சட்டென்று ஒரு வரிசையில் நின்றோம். ஏதோ கத்தினார் . எனக்கு எதுவும் புரியவில்லை. என்னுடைய சட்டையிலிருந்த பேன்கள் ஆங்காங்கே கடிக்கத் தொடங்கின. அசையாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு நின்றேன். இன்னொரு விசில் சப்தம். கதவை படாரெனச் சாத்திவிட்டு அதிகாரி விரைந்தார். எல்லோரும் தங்களுக்குள் ஏதோ பரபரப்பாகப் பேசிக்கொண்டனர். அவனைப் பார்த்தேன். திருதிருவென விழித்தபடி நின்றுகொண்டிருந்தான்.

எல்லோரும் அவரவர் படுக்கைக்குத் திரும்பினர். அவன் தரையில் உட்கார்ந்தான். நானும் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தோம். பலமணிநேரம் கழிந்தது போலிருந்தது. அரைமணிநேரத்திற்குள் பல வருடங்கள் ஒளிந்திருக்கிறதோ என்னவோ. ஒலிப்பெருக்கி சப்தம். அதற்குள்ளாகவா? வேலை செய்யப் புறப்பட்டோம். வெளியே பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கையில் துப்பாக்கியோடு தங்களுக்குள் சிரித்துப்பேசியபடி வந்துகொண்டிருந்தனர். இல்லை..இல்லை துப்பாக்கிகள் அதிகாரிகளை தங்கள் கையில் வைத்திருப்பது போலயிருந்தது. ஏதோ விபரீதமென்று மட்டும் புரிந்துகொள்ளமுடிந்தது. பனியில் அதிரும் தந்தியைப் போல எங்கள் உடல் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

வைர வடிவத் தலை. நல்ல உயரம். ஒரு அதிகாரி நெருங்கி வந்தார்.  பின்தொடருங்களென கத்திவிட்டு நடக்கத் தொடங்கினார். மண்டையோடுகளை அணிகலன்களாக அணிந்துகொள்ளும் பழந்தெய்வங்களை குறித்து எனக்குத் தெரியும். வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். ஒரு துருப்பிடித்த இரும்புச் சங்கிலியில் வரிசையாகக் கோர்க்கப்பட்ட மண்டையோடுகளைக் காண்பது போலயிருந்தது . இம்முகாமில் எஞ்சியிருக்கும் காலியிடங்களில் ஏதோவொன்றிற்கு கொண்டு வரப்பட்டிருந்தோம்.  மெல்ல மெல்லப் பாலையாகிக் கொண்டிருந்தது  நாக்கு.  உச்சபட்ச மும்முரத்திலிருந்தன வியர்வைச்சுரப்பிகள். மூக்கில் அடிக்கடி கையை வைத்துச் சோதித்துக்கொண்டிருந்தது வாழ்க்கை. என்னால் கேட்கமுடிந்தது முன்னால் நின்றுகொண்டிருந்தவனின் எச்சில் விழுங்கும் சப்தத்தை. இது வெளிப்படை இது வெளிப்படை என விளக்குக்கம்பங்கள் பாடுவது போலயிருந்தது. இச்சூழலின் புஜங்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம் தொலைவிலிருந்து நிறையப் பிணத்தை எடுத்துச்செல்லும் தள்ளுவண்டிகளை உருட்டியபடி வரிசையில் இருக்கவேண்டிய மேலும் சிலர் வந்துகொண்டிருந்தனர். நாங்கள் காத்திருந்தோம்  அல்லது காத்திருக்கும் சூழலுக்குள் வற்புறுத்தித் தள்ளப்பட்டிருந்தோம். முன்னர் கண்டதைவிட நிலவு இன்னும் பெரியதாகத் தெரிந்தது. ஒருவேளை அது வெடித்து சிதறிவிடுமா.

பனியினூடாக தொலைவிலிருந்து தள்ளுவண்டிகள் நெருங்கி வந்துகொண்டிருக்கையில் அதற்குள் பளபளக்கிற பாறைகளையும் கட்டுமான பொருட்களையும் பார்த்தேன். எனக்கு எதிரே ஒரு பெரிய பெருமூச்சு நடந்து போனது. நல்லவேளை தப்பித்தோமென்று சப்தமிட்டுச் சொன்னேன். முன்னால் நின்றுகொண்டிருந்தவனுக்கு மறுபடியும் உயிர் வந்துகொண்டிருந்தது. ஆமாம், இந்த உயிர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கேதான் போகிறது.  நாங்கள் சிதறிப்பிரிந்து பாறைகளை தூக்கி அடுக்கினோம். கத்திப்பாறைகள். வயிற்றில் ஒரு கீறல். இடைவிடாமல் ஆங்காங்கே ஏற்கனவே பேன்களும் மூட்டைப்பூச்சிகளும் கடித்துக் கொண்டிருந்தன. இவையனைத்திற்கும் சேர்த்து அநாதை ரத்தம் சொட்டியது. கையில் கரடுமுரடான பாறையைச் சுமந்துபடி அவன் என்னை உற்றுநோக்கினான். இந்த அதிகாரிகளுக்கு என்ன ஆனது? ப்ளாக் பொறுப்பாளர்களுக்கு இது தெரியுமா? இம்முகாமிற்குள் எப்படி வந்தது கருணை, வழிதவறி வந்துவிட்டதோ? கட்டுமான வேலைகளுக்காகத்தான் எனில் தள்ளுவண்டிகள் எதற்கு. முறைப்படி அவர்கள் இவற்றையெல்லாம் அங்கிருந்தே சுமந்துகொண்டு வந்திருக்கவேண்டுமே. கூடாரங்களை அமைப்பதற்கான உலோக காகிதங்களும் வந்துசேர வேலையைத் தொடங்கினோம். மேலும் சில அதிகாரிகள் டார்ச் லைட்டுடனும் நாய்களுடனும் வந்துசேரத் தொடங்கினார்கள். பனி இரக்கமற்று குத்திக்கொண்டிருந்தது. ஒருவன் பொத்தென தரையில் விழுந்தான். அவனுடைய கையில் ஆங்காங்கே நீலம் பாரித்திருந்தது. ரத்தம் இறுகிக் கறுத்துப் போய் மாவு போல காயங்களிலில் அப்பியிருந்தது. மூச்சு இல்லை. ஒரு அதிகாரி இன்னொருவரிடம் கேலியாகச் சிரித்தபடி அவ்வளவுதானா எனக் கேட்டார். இன்னும் எதிர்பார்த்தேன் என்று பதில் சொன்னார் இன்னொரு அதிகாரி.

இதுபோன்ற கூடாரங்களைக் கட்டியெழுப்புவது கிட்டத்தட்ட சிறுகச்சிறுக மரணத்தைக் கட்டுவதுதான். எங்களுடைய சாவை நாங்கள்தான் கட்டுகிறோம். இது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. எங்களில் ஒருவன் சற்றுமுன் கீழே விழுந்தவனின் பிணத்தை இழுத்து தள்ளுவண்டியில் போட்டு எடுத்துச் சென்றுகொண்டிருந்தான். இதற்கு மத்தியிலொரு விநோத ஆணை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் உடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக வேலை செய்யுங்கள் என்று ஒரு உத்தரவு. சற்று நேரத்திற்குள்ளாகவே எங்களை நிர்வாணதாரிகள் ஆக்கிக்கொண்டோம். எலும்புக்கூடுகள். உயிருள்ள எலும்புக்கூடுகள் ஆங்காங்கே பாறைகளைத் தூக்குவதும் மண்ணை தோண்டி அதில் கம்பிகளை நடுவதும் உலோக காகிதங்களைத் துருப்பிடித்த ஆணியால் இணைப்பதுமாக இருந்தன. பற்கள் பனிநடுக்கத்தில் போடுகிற டட் டட் டட் சப்தம் இசைமையோடு வலுவற்று வளர்ந்துகொண்டிருந்தது. வேலையினூடாக நான் ரகசியமாக அனைவரின் நிர்வாணத்தையும் பார்த்தேன். உடலின் நிர்வாணத்தை எலும்புக்கூடு என்றழைத்தால் எலும்புக்கூடுகளின் நிர்வாணத்தை என்னச் சொல்லியழைப்பதென்று தெரியவில்லை. என்னை ஒரு கணம் பார்த்தேன். நானும் ஒரு எலும்புக்கூடுதான். என் எலும்புகளைச் சுற்றி படர்ந்திருந்த நரம்புகளைக் கண்டேன். என் கபாலம் ஒரு மலர்மொட்டு, அவ்வளவுதான் என்று எனக்குள்ளாகவே கூறிக்கொண்டேன். இல்லையில்லை. கால்சிய மலர்மொட்டு . வேலை சென்றுகொண்டிருந்தது. நான் கீழே மடித்து தயாராக வைக்கப்பட்டிருந்த உலோக காகிதங்களை எடுத்து கம்பிச்சட்டகங்களில் பொருத்திக்கொண்டிருந்தேன். கூடாரத்தின் கட்டமைப்பு கூடிவந்துகொண்டிருந்தது. சில இடங்களில் ஆணி அடிக்கவேண்டியது மட்டும் பாக்கி. ஏணியை அவற்றில் சாய்த்து மேலேயேறி இன்னும் சில உலோக கூரைகளையும் படர்த்திவிட்டால் அவ்வளவுதான்.

அவ்வேலையை நான் செய்கிறேனென கத்தியபடி முன்னே அவன் வந்தான். ஏணியை நானும் 140603ம் பிடித்துக் கொண்டோம். 140122 என்ற எண்னைக் கையில் பச்சை குத்தியிருந்தவர் (எல்லோருக்கும் இப்படி எண்கள் பச்சை குத்தப்பட்டன. என்னுடைய எண் 140435) உலோக காகிதங்களை எடுத்துக் கொடுக்கத் தயாரானார். நான் அதிகாரிகள் எங்கெங்கு நிற்கிறார்கள் என்பதை ஒரு கணம் நோட்டமிட்டேன். அவன் ஏணியில் ஏறினான். ஆங்காங்கே எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கீழேயிருந்து உலோக காகிதங்களை வாங்கிக்கொண்டு அவற்றைக் கூரையாகப் பரப்பினான். எந்த பைத்தியகாரத்தனங்களையும் செய்துவிடக்கூடாதென பிரார்த்தனை செய்தபடி கீழே நின்றுகொண்டிருந்தேன். இது மரணவேளையாகயிருந்தது. ஆனால் எனக்கு எதிராகவே நடந்தது.


3

அந்த ஏணியில் நின்றபடி எங்கள் எல்லோரையும் நோக்கி ஒரு பேச்சாளருக்குரிய தொனியில் உரையாற்றத் தொடங்கினான். அவ்வுரையை ஞாபகத்திலிருந்து இங்குக் கொடுக்கிறேன். உரை முடியும் வரை அதிகாரிகள் காத்த பொறுமை ஆச்சரியத்திற்குரியது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.


"என் மனிதர்களே, என் விளக்குக் கம்பங்களே உங்கள் அனைவருக்கும் நள்ளிரவு வணக்கம். ஏன் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இன்னலுக்குரிய காலத்தில் பிறக்கவும் வாழவும் நேரிடுகிறது? என்ற கேள்வியிலிருந்து இவ்வுரையைத் தொடங்குகிறேன். இதோ, யாக்கோபு கனவில் கண்ட விண்ணிற்கும் மண்ணிற்குமான ஏணியில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த ஏணியில்தான் தேவதூதர்கள் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்களென்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. இன்று ஏணியை கரையானும் சிலந்தியும் தன் இல்லமாக்கியிருக்கின்றன. வானத்தின் நுனி வரை ஏணி செல்கிறதுதான் ஆனால் நண்பர்களே, வானத்துக் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. ஒரு பிரம்மாண்டமான பூட்டு தென்படுகிறது அக்கதவில். அது சார்த்தியிருப்பது எதனால்? அந்த பூட்டுக்குரிய சாவி எதனிடம் இருக்கிறது? நம் எல்லோருடைய மரணத்திடமா? இல்லை. நண்பர்களே. இங்கு இருக்கையில் நான் நிறையவே பார்த்துவிட்டேன் . உணவற்ற நாட்களில் ஒருவரையொருவர் தின்றுகொள்வது தொடங்கி ஏராளமானவற்றை. வலிமையும் வலியுமுள்ளது தப்பிப்பிழைக்கும் என்பதொன்றே இந்நிலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட விதியாக இருக்கிறது. இவ்விதி எவ்வாறு வந்துசேர்ந்ததென்றும் தெரியவில்லை. இந்நிலம் நர அகத்தின் வார்ப்புருவத்தை இன்று சுமந்துகொண்டு நிற்கிறது. பேசும் விஷப் புகைகள், பாதி துப்பாக்கி பாதி மனித உடல் கொண்டவர்கள்,  நரமாமிசமுண்டு வளர்ந்த நாய்கள், ரத்த்காட்டேரிகளிடம் தொழில் பயின்ற பேன்கள், கட்புலனாகவாறு ஏக்கத்துடன் அங்குமிங்கும் அலையும் ஆட்கொல்லிநோய்கள் என இங்குப் பிரஜைகள் நிரம்பியிருக்கின்றனர். தன்னைச் சேர்ந்தவர்களைப் பாதுகாக்க களிமண்ணிலிருந்து ஒரு பூதத்தை அன்றொரு ராபி உருவாக்கினார். ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் கழிந்து மீண்டும் அந்த இன்னலின் காலகட்டம் தோன்றியிருக்கிறது  நண்பர்களே. வாருங்கள், களிமண்ணிலிருந்து மீண்டும் அதை உயிர்த்தெழச் செய்வோம், வாருங்கள், களிமண்ணிலிருந்து மீண்டும் அதை உயிர்த்தெழச் செய்வோம்."

பிறகு ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். என் மார்புப்பகுதியில் அவனுடைய கபாலம் தெறித்துச் சிதறியிருந்தது. அசையாமல் ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தேன். ரத்தத்தைக் துடைக்கக்கூடாது என்று ஒரு அதிகாரி கத்தினார். இன்னொருவன் அந்த ஏணியில் ஏறி மீதியிருந்த வேலைகளைச் செய்துமுடித்தான். ஏற்கனவே பனியால் மூவர் இறந்துபோயிருந்தனர். தள்ளுவண்டியில் இறந்த ஒருவனுடைய பிணத்தை எடுத்துக்கொண்டு சென்றவன் இன்னும் திரும்பவில்லை . ஆனால் தள்ளுவண்டி மட்டும் நின்றுகொண்டிருந்தது. ஒருவேளை இந்த தள்ளுவண்டி அவனைக் கொன்றிருக்குமோ? எல்லோரும் அவரவர் சீருடையை அணிந்துகொண்டோம். ஏணிக்கு கீழே கிடந்த அவனுடைய சடலத்தைப் பார்த்தேன். அதிகாரி விசில் ஊதினார். என் மீது படிந்திருந்த அவனுடைய ரத்தம் குளிரில் உறைந்துபோயிருந்தது. நாங்கள் வரிசையாக நின்றோம். எங்களுடைய கூடாரத்தை நோக்கி எறும்புகளென ஊர்ந்தோம். வானத்தைக் கண்டேன். அங்கே ஒரு கதவு திறந்திருந்தது.


4

குரூரங்களைக் காணும்போது கண்களும் அவற்றிலொரு நபராகப் பங்கு கொள்ள வற்புறுத்தப்படுகின்றன. ஆனால் எல்லாம் கைமீறிப் போய்விடுகிறது. கண்களைக் கூட்டத்தின் பின்வரிசையிலிருந்து களத்திற்குள் சக கண்கள் தள்ளிவிட்டுவிடுகின்றன. பின்பு சக கண்கள், உணரவோ காணவோ முடியாத இருட்டிற்குள் ஒளிந்தபடி நம்மைக் கண்காணிக்கின்றன. என் கண்களுக்கும் இதுதான் நேர்ந்தது. கட்டுப்பாடு அற்று எனது கண் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பயன்படுத்தி அதன் பார்வையில் கீறலும் தேய்மானமும் ஏற்படத்தொடங்கியது. என் உடல் இம்முகாமின் வேலைத்திட்டங்களுக்கு மிகச்சிறப்பாகவே பழகிவிட்டது. நான் இல்லாவிட்டாலும் அது அவர்களுக்காக உழைக்கும். கூடாரங்களைக் கட்டுவதற்காகவும் ரொட்டிக்காகவும்  வரிசையில் நிற்கும். சுரங்கங்களிலிருந்து தன்னைவிட எடையுள்ள பாறைகளைச் சுமந்துவரும். இன்னும் அவனுடைய ரத்தத்தின் நெடி வந்துகொண்டிருந்தது. என் உடலைக் காணவில்லை.

நள்ளிரவுகள் பல இடையில் கடந்துபோயிருந்தன. கடுங்குளிர்காலம் தொடங்கியிருந்தது. கூடவே டைபாய்டும். கதவிடுக்கு வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். இறுகிய ரத்தத்தால் செய்யப்பட்டதென்ற தோற்றத்தை உருவாக்கும் ரயிலொன்று முகாமுக்கு வந்திருந்தது. அதன் ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் அச்சு அசலாய் அவனைப் போன்ற தோற்றமுடையவர்கள் தொடர்ச்சியாக இறங்கிக் கொண்டிருந்தனர். இறங்கிய ஒவ்வொருவரும் நானிருந்த திசையைப் பார்த்துச் சிரித்துவிட்டு அந்த ஏணியிருந்த இடத்தை நோக்கி வரிசையாக முன்னேறத் தொடங்கினர். அதற்குமேல் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பனிமூட்டமாகயிருந்தது. அன்று முழுவதும் தூங்கவேயில்லை. கைவசம் இரண்டு ரொட்டித் துண்டுகள் இருந்தன. முகம் சவரம் செய்யப்படாமல் அலங்கோலமாகி பலவீனமான தோற்றத்தை உருவாக்கியிருந்தது. சீருடையை உதறினேன். சில பருத்த பேன்கள் கீழே விழுந்தன. அவை மீண்டும் வேகமாக என்னை நோக்கியே ஊர்ந்துவந்தன. ஏன் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இன்னலுக்குரிய காலத்தில் பிறக்கவும் வாழவும் நேரிடுகிறது?


000

நன்றி: கல்குதிரை