ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே




Artist: Gulam Rasool Santosh

1
இரண்டு மரத்திற்கு முன்னால்
இரண்டு மரங்கள்
இரண்டு மரத்திற்குப் பின்னாலும்
இரண்டு மரங்கள்
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
முன்னாலும் பின்னாலும்
முன்னாலும் பின்னாலும்தான்
நீ அறிவாய் தானே

2
புலப்படவில்லை
அசைவில்லை
சப்தமுமில்லை
நிறமுமில்லை
அர்த்தமுமில்லை
வடிவமுமில்லை
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
அங்கே சூன்யமுமில்லை
எதுவுமில்லை
நீ அறிவாய் தானே

3
ஓவ்வொன்றும் ஓவ்வொன்றை மறைக்கிறது
அதே ஓவ்வொன்றும்
ஓவ்வொன்றை காட்டுகிறது
மறைந்திருப்பதில் விதை நட்டு
புலப்படுவதில் கனி பறித்துச்செல்லும்
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொன்றுக்கும் இடையே
ஒன்றுமே இல்லையெனும் கணமும் உண்டு
நீ அறிவாய் தானே

4
தன்னைத்தானே எரித்துக் கொண்டு
பரவும் அழலுக்கு  உடலில்லை
வீழ்வை நோக்கி கூட்டமாய்ப்
பாயும் புனலுக்கு உடலில்லை
கரைந்துக்கொண்டே நகரும்
முகில்களுக்கு உடலில்லை
தன்னைத்தானே புதைத்துக்கொண்டே
தகிக்கும் நிலத்திற்கு உடலில்லை
இலை நிழலசைக்கும் 
காற்றுக்கு உடலில்லை
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
இறந்துபோன பின்
மரணத்தின் சரீரத்திற்கே சரீரமில்லை
நீ அறிவாய் தானே

5
வாசலும் கிடையாது
வீடும் கிடையாது
உள்ளேயும் கிடையாது
வெளியேயும் கிடையாது
இடமும் கிடையாது
காலமும் கிடையாது
"சுயம்" ஒரு சுழற்பாதை
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
அச்சுழற்பாதையை விட்டு
உன்னால் கூட வெளிவரமுடியாது
நீ அறிவாய் தானே

6
இங்கேயிருக்கும் இந்நாற்காலி
அன்று எங்கோ மரமாக நின்றது
அந்த மரம் அன்று எங்கோ
விதையாக இருந்தது
அந்த விதை அன்று
ஏதோ கனிக்குள் இருந்தது
அந்தக் கனி அன்று ஏதோ
மரத்தில் தொங்கியது
அந்த மரம் எங்கோ விதையாக இருந்தது
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
அந்த விதை
ஏதோவுக்கும் எங்கோவுக்கும் இடையில்
பிறந்ததுதான்
நீ அறிவாய் தானே

7
எண்ணிலடங்கா முலைகளைக் கொண்டு
எண்ணிலடங்கா நொடிகளுக்கு
பாலூட்டும் அன்னையே
உங்கள் வீடெங்கேயிருக்கிறது
எண்ணிலடங்கா யோனிகளைக் கொண்டு
எண்ணிலடங்கா நொடிகளை
பெற்றெடுக்கும் தாயே
உங்கள் வீடெங்கேயிருக்கிறது
என்னிலடங்கா எவனிலடங்கா சனனியே
உங்கள் வீடெங்கேயிருக்கிறது
ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே
அத்தாயின் வீடெங்கேயிருக்கிறது
நீ அறிவாய் தானே