சின்னஞ்சிறிய சந்தோஷங்கள் இருண்ட காலத்தில் வாழ்கின்றன

Artist: Gurbuz Dogan Eksioglu

1
பெரிய சந்தோஷங்கள் வரும்போது
சின்னஞ்சிறிய சந்தோஷம்
விழிவிரிய மிரட்சியுடன் பார்க்கிறது
என்ன செய்ய
யாரோ ஒருவன்தான்
அதனிடம் தெம்புடன் இருக்கச்சொல்கிறான் 

2
ஒரு சின்னஞ்சிறிய சந்தோஷம்
டீக்கடையில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறது
இருசக்கர வாகனத்தில்
முறைத்துக் கொண்டே போகிறது பெரிய சந்தோஷம்

3
ஒருசமயத்தில்
சின்னஞ்சிறிய சந்தோஷத்தைக் கரப்பான் பூச்சி உட்பட
யாருமே கண்டுகொள்ளவில்லை
சுவரில் முட்டிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறது