விடுதலை
அக்டோபர் மூடுபனி ஏரியைக்
கைப்பற்றிவிட்டது.
இது பறவைகளின் உருவம் தொலைந்து
குரல்கள் மட்டும் கேட்கும்
ஒரு பச்சையான ஈர விடியல்.
மரங்கள் யதார்த்தத்துக்கு வெளியே
சலசலக்கின்றன.
நான்
காமச்சித்தரிப்புகள் மிகுந்த
ஒரு காதல் கடிதத்தை என் மனதில்
தட்டச்சு செய்கிறேன்.
என் அந்நிய உடலை, அவ்வப்போது
வந்து மோதும் சில்லென்ற காற்றின் அலைகள்—
நானும் நிலக்காட்சி மீது நகரும்
ஒரு மூட்டம்தானோ என என்னை மயங்கச்செய்கின்றன.
பாதி வழியிலேயே வீட்டிற்குத் திரும்புகிறேன்,
அங்கே என் அறையில்
நீல இருட்டில்
ஒன்றடுத்து ஒன்றாய் கிடக்கும்
உடற்பயிற்சி உபகரணங்களைக் காரணமின்றி
வெறிக்கிறேன்
பின்பு மின்னணுப் புத்தகக் கருவியை எடுத்து
நாலைந்து வரிகளைப் படிக்க முயல்கிறேன்.
திடீரென எல்லா எழுத்துக்களும்
வெறும் வடிவங்களாய் தெரிகின்றன
*

Comments
Post a Comment