மறுபடியும் நீ
![]() |
| Artist: Georgia O'Keeffe |
வண்ணத்துப்பூச்சிகள் நெய்த வலையா அந்த மரம்?
ஒளியில் இருள் இறங்கவும்
திரைவிரிப்புக்கு அப்பால் உலகம் நீக்கப்பட்டுவிட்டது
ஆனால் மழையின் நினைவுகள் மட்டும் எஞ்சியுள்ளன
உன் மேலுதடு ஒரு மலைத்தொடர் என என்னை அழைக்கிறது.
இதோ என் உதடுகள், நீ இழந்த அடிவாரம் அது.
பொன்னிருட்டு, காலத்தின் அகராதி,
சடசடவென நம் அர்த்தங்கள் மாறுகின்றன,
முதலில் அண்ணாந்து பார்க்கையில்
ஒரே உடலெனத் தோன்றும்
இரு நீர்ப்பறவைகளாக அப்புறம்
நம்மை யாரென்று தெரியாத
தண்ணீர்த்துளிகளின் சமுத்திரத்தில்
நீந்தும் ஜோடிச் சுறாக்கள் என.
இனி கரையில் சந்திரவொளியில் மினுங்கும் வெண்சங்கு யார்?
மறுபடி மறுபடி காற்றின் வேடமணிந்து
வெண்சங்கினுள் நுழைந்து வெளியேறித் திளைத்து
மொழிக்கு வெளியே ராத்திரி நாணல்கள் போலப் பாடுவது யார்?
நம்மால் சொல்ல முடியாது,
ஏன் எப்போதுமே சொல்ல முடியாது.
மறுநாள் — நாம் கண்விழிக்கிறோம்,
தன் தோகையை விரித்தவாறு
பாசி படர்ந்த மதிலினின்று அகவும்
வெளிச்சத்தைக் கேட்டபடி.
உலகம் மீண்டும் வருகிறது நம்மைச்சுற்றி,
அதுவும் ஒரு மிருதுப் போர்வை போல...
*

Comments
Post a Comment