கங்கு
![]() |
| Artist: Harald Sohlberg |
ஜூலைக்காற்றில் மொத்த புற்களும் தங்களை அறிந்துகொண்டிருந்தன,
சைக்கிளில் சட்டை உடுத்தாமல் முதியவரொருவர் மிதந்துகொண்டிருந்தார்,
மலைகளில் நரம்புகள் கூட தெள்ளத்தெளிவாகத் தெரிந்தன.
ஓரிடத்தில் சேற்றுச்சகதியில் முழுநிலவுக்காட்சி, நன்றி அரசாங்கத்துக்கு.
நான் நடையைத் தொடர்ந்தேன், தூரத்தில்
வயிற்றில் காயமுற்ற ஒரு நாய்—
தன் உடலைத் தரதரவென இழுத்துச் சென்றபடி.
வழிநெடுக நேர்கோடாக ரத்தத் துளிகள், பாதையை இரண்டாக கிழிப்பது போல.
நிலக்காட்சிகள், சாயங்காலம் என
அத்தனை பாதைகளும்
கொஞ்சம் ஓரமாக
ஒதுங்கிவிட்டது போலிருந்தது— ஒரு ரத்தப்பாதை...
இரு வழிகள் ஆளுக்கொரு உலகம்நோக்கி பிரியும் இடத்தில்
நான் நின்றுகொண்டிருந்தேன்.
*

நிலக்காட்சிகள், சாயங்காலம் என
ReplyDeleteஅத்தனை பாதைகளும்
கொஞ்சம் ஓரமாக
ஒதுங்கிவிட்டது போலிருந்தது
சில காட்சிகள் நம்மை நிலைகுலைய வைத்து விடுகிறது.
ஆம், ஆம். உண்மைதான்.
Delete