வழியில்
அறுவடை முடிந்துவிட்டது,
எல்லா சாளரங்களும் மாலை ஒளியால் நிரம்புகின்றன.
கரையில் மிதவைகள், புகைக்கட்டிகளாய் நெகிழும் தூரத்துக் கட்டடங்கள்,
தன் பெரிய வாயைத் திறந்தபடி பற்களைக் காட்டுகிறது நிலக்காட்சி.
நாலைந்து மீன்கொத்திகள், மின்கம்பியில்,
உனக்காகப் புகைப்படம் எடுக்கலாம்தான்,
வெறுமனே பார்த்தபடி நடக்கிறேன்.
வழியில் மணிச்சப்தமொலிக்கத் தூரத்தை அசைபோட்டபடி
தொழுவத்திற்குத் திரும்புகின்றன மாடுகள்.
வெளிச்சத்தின் மூச்சுத்திணறல் என
பாழடைந்த கோயில் சிற்பங்களிலிருந்து
கசிந்தது போல புராதனமான
ஓர் அந்திப்பொழுது.
சற்றுநேரத்திற்கு எனக்கு மறந்தேவிட்டது
கவிழ்ந்த எனது தலையை எப்படி உயர்த்துவது என்று.
ஓரிடத்தில் விழுந்து கிடக்கும் பச்சை தென்னை ஓலையை பார்த்ததும்
சட்டென கைகளைத் தேய்த்துக்கொண்டு
என் கன்னத்தில்
வைத்துக்கொள்கிறேன்: கதகதப்பு.
இரவின் காலி பாத்திரங்கள்— அதனுள்
சொட்டுச்சொட்டாக வழியவிருக்கும் மரங்கள்,
ஒரேயொரு சங்குப்பூவை பறித்தால் இரண்டு மலர்களைப் பறித்துவிடுவேனா?
ஒவ்வொன்றுமே அடர்ந்திருந்தன
ஒரு இருக்கையில்
உட்கார்ந்திருக்கும் இருவர் என.
இது திங்கட்கிழமை ஆனால் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம்,
பாதைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன விண்பார்க்க,
அரிதாக வாகனங்கள் வருகின்றன,
சுதந்திரத்தின் நிறத்தில், ஏறக்குறைய காட்டு எருதுகள் போல. பிறகு ராத்திரி வானத்தில்
வாணவேடிக்கைகள் தென்படும் ஏதோவொரு ஓரத்தில்.
நான் வாழ விரும்பினேன் ஒரு தண்ணீர்த்துளியின் வாழ்க்கையை,
குப்பைத்தொட்டியின் சாந்தமான கண்கள் நான் வேண்டியது.
புலரி வெளிச்சத்தின் பொக்கிஷப்பெட்டியிலும்
என் கரங்கள் படவில்லை.
சன்னல்கள் நிலவியிருக்கவேண்டிய இடங்களிலெல்லாம் கதவுகள்.
ஆனால் அன்பே, நான் தனியாகவும் இல்லை,
இத்தனை நாட்களில் முதல்முறையாகத் திடுமென உணர்ந்தேன்:
என் விழிகளை ஒருகணம் மூடித்திறந்தாலும்
உடைந்த நத்தை ஓடுகள், மாலைநட்சத்திரம்,
மலைத்தொடர்கள், புகைப்படக்குவியல்கள்,
ஏரியின் சலசலக்கும் கருமை என அத்தனையுமே
என்னால் பார்க்கப்படுவதற்கென ஆதுரத்துடன்
எங்கெங்கும் காத்திருப்பதை.
நான்தான் எவ்வளவு தவறவிட்டுவிட்டேன் கட்புலனாகும் இந்த உலகத்தை...
*

Comments
Post a Comment