இரவு வணக்கம்
தராசுத்தட்டிலிருந்து வெளியில் குதித்த பிறகு அப்பா வாங்கித்தந்த
சிறுவயதுத் தொப்பி,
மத்தியானம் போலவே வெளிறிய
என் நெடுஞ்சாலைகள் நெளியும் முதல் கைக்குட்டை,
வார்த்தைகளற்ற நைய்ந்த டிரவுசர் அப்புறம்
இதயத்திற்குச் சன்னல் வைக்கப்பட்ட சட்டை,
வலதுப்பக்கத்தைப் பறிகொடுத்து
இடது விழிக்கு மட்டும்
வேறொரு உலகத்தைப் பரிசளித்த வண்ணக் கண்ணாடி
என ஒவ்வொன்றுமே
கைகளில்லாமல்
கால்களில்லாமல்
சரீரமில்லாமல்
ஆனால் சிவந்த கண்கள் மாத்திரம் கொண்டு
அங்கிட்டும் இங்கிட்டுமாக
எதையோ துரத்திச்செல்வது போல
ஓடுகின்றன என் கபாலத்திற்குள்.
இரவு வணக்கம்,
ராட்சத முகில்களே, கல் ஆந்தைகளே,
அறுந்த சிலந்திவலைகளே,
இரவு வணக்கம்.
*

Comments
Post a Comment