குரங்குகள் - ஆடம் ஜகாயெவ்ஸ்கி
ஒரு நாள் குரங்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றத் துணிந்தன.
தங்க முத்திரை மோதிரங்கள்,
விறைத்த சட்டைகள்,
நறுமணமிக்க ஹவானா சுருட்டுகள்,
பளபளக்கும் தோல் காலணிகளுக்குள் திணிக்கப்பட்ட பாதங்கள்.
பிற தேடல்களில் ஈடுபட்டிருந்த நாம்,
கவனிக்கவேயில்லை: யாரோ ஒருவர் அரிஸ்டாட்டிலை
வாசித்துக் கொண்டிருந்தார், வேறொருவரோ
முழுமையாக காதலில் ஆழ்ந்திருந்தார்.
ஆட்சியாளர்களின் உரைகள் சற்றே தாறுமாறானவையாக மாறின,
அவர்கள் உளறவும் செய்தனர், இருந்தாலும்
நாம் எப்போது தான் உண்மையாகச் செவிமடுத்திருக்கிறோம்?
இசைதான் நன்றாக இருந்தது நமக்கு.
போர்கள்: முன்னெப்போதையும் விட கொடூரமாக நடந்தன; சிறைகள்:
முன்பை விட மோசமாக நாற்றமடித்தன.
குரங்குகள்தான், அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டன போலும்.
*

Comments
Post a Comment