பிரார்த்திக்கும் முறைகள்

Artist: Jakub Schikaneder


இருந்தது

எவ்விதமான வெளிச்சமும் எனக்கு உதவாத

ஒரு பருவம்.

ஏதோவாக, யாரோவாக,

பசித்து, தனித்து, எங்கோ இருந்தேன்.

யுகங்கள் முடிந்தன

பார்வைகள் சுழன்றன

எலும்புகள் உரமாகின

பிறவிகள் ஓய்ந்து

திரும்பிவரும்போது

காலத்தின் பல்லாயிரம் திரைகள் சலசலத்து

மெளனச்செறிவிலிருந்து

ஒரு மாலைநேரம் பிரசன்னமாவதை அறிந்தேன்

கண்காணாத ரசவாத கூடங்களில்

உலகம் தயாரிக்கப்படுவதை அறிந்தேன்

தெய்வதம் கண்டேன் பேய்கள் கண்டேன்

மட்கிய இலைகளின் நடனத்தில்

நெஞ்சழிந்து நின்றேன் 

துள்ளும் மீன்களில் தூராதிதூரங்களின்

உறக்கம் அறிந்தேன்.

அண்ணாந்து நோக்கினேன்—

ஆசையின் அட்சரங்கள் திரும்பிவந்தன

என் ரத்தத்தின் கிளைகளுக்கு. 

அப்புறம் யாருமறியாத நீர்ப்பரப்பினுள் நிற்பது போல

உன்னைக் குறித்த கற்பனைகளில்

ஒரு காலம் தொடங்கியது

நான் என்ன என்னவெலாம் வேண்டும் என எண்ணினேன்?

அவை மறந்துவிட்டன

Comments

  1. நான் என்ன என்னவெலாம் வேண்டும் என எண்ணினேன்?

    அற்புதம்.

    என்ன வேண்டும் என்னும் போதே மறையும். வேண்டும் நிலையின்றி தேடும் போதோ விரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மைதான்.

      மிக்க நன்றி!

      Delete

Post a Comment