பூர்ணிமை
![]() |
| Artist: Rebecca Chaperon |
பல பிறவிகளை ஒருகணத்தில்
தடுக்கி விழச் செய்த சிறுகல்லே நன்றி
என் நொடிநேரப் பாதாளங்களுக்குள்
படித்துறைகள் மிதப்பதை
உன்னாலேயே அறிந்தேன்
வாழ்த்துகள் மரங்களே வாழ்த்துகள்
நிலக்காட்சிகளின் இதயமாகத் திகழ்கிறீர்கள்
பச்சை ஒளியும் புள் கூவலுமாக
எனது மூன்றாவது இதயமாக ஆகமாட்டீரோ?
நன்றி எங்கிருந்தோ எழும்
மொழிபெயர்க்கவியலாத சங்கீதமே
நீ என்னை எளிமையாக்குறாய், ஒரு பழரசம் போல.
வாழ்க காற்றே வாழ்க
நான் உன் மைந்தன் அன்றோ
மகரந்தத் தூளைப் போல என்னை ஏந்தி
தெய்வங்களில் சேர்க்கிறாய்
என்னைப் பார்த்தபடி நடந்துசெல்லும்
பெயர்தெரியாத மர்ம நண்பனே
நரம்புகள் துடிக்கும் கழுத்துக்கு மேலே
என் முகத்தை வரைகிறது உன் வதனம்
நன்றி ஒரு துளி ஈரப் பிரபஞ்சமே
நீ தொட்டதும் குளிர்பிரதேசங்களுக்குக்
கடத்தப்படுகிறேன் ஒருகணத்தில்.
வெளிச்சமே நலமா?
விழிகளைத் திற எல்லாம் குணம்கொள்ளும் என்று
சடசடவென என்னை நிறைக்கிறது உன் கோலாகலம்
நீ நலம் குன்றாது இருப்பாயாக.
இப்பசுங்காலையில்
நடந்து
நடந்து
நடந்து
ரகசிய நீரோட்டமாக சலசலக்கும் உன் வாழ்த்தின்
கரையோரத்திற்கே
வந்துவிட்டேன்
உள்ளுள் ஓர் ஏக்கம்:
என்னை நானே ஆசீர்வதித்துக்கொள்ளட்டுமா
கையை நான் உயர்த்துகையில்
உடன் உயராதோ உன் நீலக் கரமும்...
*

Comments
Post a Comment