கிரெகரி ஆர் கவிதைகள்
![]() |
| Artist: Sydney Smith |
1. பகற்கனவு
நான் எங்கும் போகவில்லை;
என் மேசையில்தான் அமர்ந்திருக்கிறேன்,
ஆனாலும் சூரியன் மலையைத் தீண்டுவதை நான் பார்க்கிறேன்.
அருகில், கனத்தப் புத்தகங்களுடன் உயர்ந்து நிற்கும்
இருண்ட அலமாரியையும் உணர்கிறேன்
பிறகு அந்தச் ஜன்னல்—
இரண்டு உலகங்களிலும் கைம்பெண் அது.
2. மிருகங்களை உருவாக்குதல்
எனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது
முதிர்ந்த வெள்ளை ஆமையின் ஓடு,
வளை அணிலின் மண்டையோடு,
பிறகு ஒரு செந்நிற அணிலின் வால்
ஆகியவற்றை ஒன்றாக ஒட்டி
எனது முதல் கற்பனை மிருகத்தை
உருவாக்கினேன்.
படைக்கப்பட்ட எதுவும்
எப்போதும் தொலைந்து போவதில்லை.
அது இப்போது என் எண்ணங்களினூடே
ஊர்ந்து மேலே வருகிறது,
நான் அதற்கு அளித்திடாத கால்களால்.
3. பாலம்
விடியல் வெளிச்சத்தில் இந்த வெண்ணிற உத்திரங்கள்
நாம் விடுபடத் துடிக்கும் எலும்புகளாகத் தெரிகின்றன.
தண்ணீர் என்னை அழைக்கிறது, பிறகு
சொல்கின்றது:
உன் உடல் எங்களுடன் இங்கே இருக்கிறது.
எங்கே போயிருந்தாய்?
நாங்கள் காத்திருந்தோம்.
உன்னிடமே நீ திரும்பி வா
4. நான் எழுதப்போகும் கடைசிக் காதல் கவிதை . . .
எறும்புகளின் கண்ணீரைத் தேன்சிட்டுகளின் இறக்கைகளாக மாற்றும்
ஒரு கண்டுபிடிப்பை அது உள்ளடக்கியிருக்கும்.
ராத்திரி வானம் நிலவுக்காக எழுதிய
ஒவ்வொரு இரங்கற்பாடலையும் அது ஏந்தியிருக்கும்.
"ஆம்" என்ற வினாவுக்கான பதிலை அது வெளிப்படுத்தும்.
பெண்ணொருத்தியின், ஆணொருவனின் மேலும் நாயொன்றின் வடிவில்
தானாகவே வளர்ந்த ஒரு ரோஜாப் புதரை அது சித்தரிக்கும்.
அது நம்முடைய எல்லாத் துயரத்தையும்
சில மகிழ்ச்சிகளையும் உள்ளடக்கியிருக்கும்.
எலிகளின் கடைசி அரசி அணிந்த கண்ணாடிக் காலணிகளையும்,
நாம் சந்தித்த இடத்தில் எழுந்த
கண்ணுக்குத் தெரியாத பேராலயத்தையும்
அது காட்சிப்படுத்தும்.
வானிலைக்கேற்ப நிறம் மாறும் இலைகளையுடைய
ஒரு மரத்தை அது காட்சிப்படுத்தும் — நாற்பது டிகிரியில் அதன் இலைகள்
பிரகாசமான நீலமாக மாறுவதையும்.
உயிர் பிழைத்தவர்களைத் தேடி, கனவுகளினூடே பயணிக்கும்
ஒரு பனிக்கப்பலின் மாதிரியையும் அது உள்ளடக்கியிருக்கும்.
அது நம்முடைய எல்லா மகிழ்ச்சியையும்
பெரும்பாலான துயரத்தையும் உள்ளடக்கியிருக்கும்.
**
கிரெகரி ஆர் (1947- )
அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர். The Last Love Poem I Will Ever Write, City of Salt, River Inside the River என பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. Poetry as Survival, Primer for Poets and Readers of Poetry என மூன்றிற்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

Comments
Post a Comment