இந்த இருள் ஒரு மணிக்கோபுரமாக இருக்கட்டும் - ரெய்னர் மரியா ரில்கே
![]() |
| Artist: Agnes Pelton |
வெகுதூரம் கடந்து வந்திருக்கும் அமைதியான நண்பனே,
உன் சுவாசம் உன்னைச் சுற்றியுள்ள வெளியை
விரிவாக்குவதை உணர்ந்து பார்.
இந்த இருள்
ஒரு மணிக்கோபுரமாக இருக்கட்டும்,
நீ அதனுள் ஒரு வெண்கல மணியாக இரு.
நீ ஒலிக்கும்போது, உன்னை பலமுறை மோதி அறைவது எதுவோ,
அதுவே உனது பலமாகிறது.
மாற்றத்தினூடே முன்னும் பின்னும் அசைந்தாடு.
எப்படி இருக்கிறது, இவ்வளவு தீவிரமான வலியை உணர்வது?
உன் பானம் கசப்பாக இருந்தால்
உன்னையே மதுவாக மாற்றிக்கொள்.
கட்டுக்கடங்காத இவ் இரவில்,
உன் புலன்களின் முச்சந்தியில்
ஒரு மர்மமாக இரு,
அவ்விடத்தே கண்டறியப்படும்
அர்த்தமாகவும் இரு.
உலகம் உனக்குச் செவிசாய்ப்பதை நிறுத்திவிட்டால்,
அமைதியான நிலத்திடம் சொல்: நான் பிரவகிக்கிறேன்.
பாய்ந்தோடும் நீரிடம் சொல்: நான் இருக்கிறேன்
*
மேற்கண்ட கவிதை, ரில்கேவின் புகழ்பெற்ற 'Sonnets to Orpheus' தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒன்றாகும். இத்தமிழாக்கம், ஜோன்னா மேசி (Joanna Macy) & அனிதா பரோஸ் (Anita Barrows) ஆகியோரின் ஆங்கில மொழியாக்கத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment