டபுள்யூ. எஸ். மெர்வின் கவிதைகள்
![]() |
| Artist: Peter Hurd |
1. குளிர்கால அந்தி
அநாதரவான குளிரில் சூரியன் அஸ்தமனமாகிறது
நமக்காக இவ்வளவு காரியங்களை ஆற்றியபின்னும்
யாதொரு புகாருமற்று
எவற்றிலும் நம்பிக்கையற்று
ஆழ அமிழ்கின்றது
மறைந்ததும் அதன் பின்னே பாயும் ஓடையின் சத்தம் எழுகிறது
அது தன் புல்லாங்குழலையும்
எடுத்துவந்திருக்கிறது
தொலைதூரப் பயணத்திற்கு என
2. விடியற்காலை
அந்த விடியற்காலையில் உன் உடல் கண்டு
திகைப்புடன் விழித்தேன்
ஏனெனில் அதையேதான் கனவு கண்டிருந்தேன்
எப்போதும் போலவே
நம்மைச் சூழ்ந்திருந்த அந்த வெண் மலரிதழ்களோ
உறங்கியிருக்கவேயில்லை
அதிகாலை ஒளியைத் தொட்டபடியிருந்தன இலைகள்
என் கழுத்தில் உன் மேனியைப் போலவே
வெதுவெதுப்பான உன் மூச்சுக்காற்று
உன் கண்கள் மெல்லத் திறக்கின்றன
பனித்துளியின் வாசனை
3. தேடல்
உன்னைத் தேடும்போது எல்லாம் மெளனமாகிறது
பேயைக் கண்ட கூட்டத்தைப் போல
ஆம், அது உண்மைதான்
இருந்தும் உன்னை நோக்கி வர
நான் முயன்றுகொண்டிருக்கிறேன்
அதாவது உன்னைத் தேடி—
சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் பல பாதைகள்
மறைந்துவிட்டன
அடிமேல் அடி வைத்து
என் வீடான உன்னை நோக்கிச் செல்லும் அந்தப் பாதைகள்
சாலைகள் எங்கும் இட்டுச் செல்லாத காலத்திலேயே அவை இருந்தன
இப்போதும் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்
உன்னைத் தேடியபடி
உலர்ந்த நெடும்புற்கள் நிறைந்த மலையில்
நடந்து செல்லும் ஓர் இதயமாக
என்னைச் சுற்றிலும் பறவைகள் காற்றில் மறைகின்றன
நிலத்திற்குள் பாய்கின்றன நிழல்கள்
என் முன்னே கற்கள்
மெழுகுவர்த்திகளைப் போல
அணையத் தொடங்குகின்றன
எனக்கு வழிகாட்டியபடியே.
4. முன் கதவருகே
காலை முழுவதும் மழை
நீண்ட குட்டையில் ஒரு தேரை பாடிக்கொண்டிருக்கிறது
தண்ணீரைப் போலவே பழமையானதொரு மகிழ்ச்சி
*
டபுள்யூ. எஸ். மெர்வின் (1927–2019)
அமெரிக்காவின் தலைசிறந்த கவிகளில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர். சுற்றுசூழல் ஆர்வலர். இரண்டு முறை கவிதைக்கான புலிட்சர் விருதைப் பெற்றவர். A Mask for Janus, The Lice, The Carrier of Ladders, The Shadow of Sirius என முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு கவிஞர் ஜீன் ஃபோலைன், அர்ஜென்டினக் கவிஞர் ராபர்ட்டோ யூவரோஸ் தொடங்கி இந்திய சிருங்கார கவிதைகள், சீன செவ்வியல் கவிதைகள் வரை என தன் மொழியாக்கங்களால் உலக கவிதைப்புலத்திற்கு வளம் சேர்த்தவர்.

மறைந்ததும் அதன் பின்னே பாயும் ஓடையின் சத்தம் எழுகிறது
ReplyDeleteஅது தன் புல்லாங்குழலையும்
எடுத்துவந்திருக்கிறது
தொலைதூரப் பயணத்திற்கு என
அற்புதம். இரவின் மடியில் அந்த நதியின் வேய்ங்குழல் இசை...
நன்றி.
ஈஸ்வரி
நன்றி! நன்றி!
Delete