பாலத்தைத் தனிமையாக உணர வைப்பவன் - கிம் சா-இன்
![]() |
| Artist: Kobayashi Kiyochika |
இறைவா,
இதைப் போன்றதொரு கவிதையை எடுத்து,
சிரத்தையுடன் நான் மறுபடியும் படியெடுத்து எழுதினால்—
அதை ஒரு புதிய கவிதை என்று உன்னால் ஒப்புக்கொள்ள முடியாதா?
"யாரோ ஒருவன் பாலத்தைக் கடப்பதைப் பார்க்கிறேன்.
அவன் நடக்கிறான், சற்றே நின்று தொலைதூர மலைகளைப் பார்க்கிறான், பிறகு
நடக்கிறான், மீண்டும் நிற்கிறான், மீண்டும் மலைகளைப் பார்க்கிறான்.
கொஞ்சநேரம் கழித்து வேறொருவன் பாலத்தைக் கடக்கிறான்.
வேகமான காலடிகளுடன் விறுவிறுவென
நடந்து சுவடின்றி மறைந்துவிடுகிறான்.
அவன் கடந்த பாலம் மட்டும் தனியாகவும் வெறுமையாகவும் கிடக்கிறது.
பாலத்தை மிக விரைவாகக் கடப்பவன், அந்தப் பாலத்தைத் தனிமையாக உணரச் செய்கிறான்."
அவ்வளவுதான் கவிதை.
(என்ன, இன்னும் எத்தனையோ நல்ல கவிதைகள் உள்ளன என்கிறாயா?)
அது புதிய கவிதை ஆகாது என்று நீ சொன்னால்,
சரிதான், என்னால் ஒன்றும் செய்யமுடியாது.
ஆனால் இறைவா,
தயவுசெய்து
மிக வேகமாக கடந்து செல்வதன் மூலம்
ஒரு கவிதையைத்
தனிமையாக உணரச்செய்யாதேயும்
விண்மீன்களை நான் மிக அதிகமாகப் பார்த்துவிட்டேனோ?
அவை கறைபட்டுப் போகுமோ?
வானத்தை நான் மிக அதிகமாகப் பார்த்துவிட்டேனோ?
வானம் கறைபட்டுப் போகுமோ?
இறைவா,
நடுங்கியபடி இவ்வுலகை விட்டுச்சென்ற ஓர் ஆன்மா அவன்.
*
கிம் சா-இன் (Kim Sa-In) (1956- )
தென் கொரிய கவிஞர். விமர்சகர். Night Letters, Liking In Silence என இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

Comments
Post a Comment