வேரா பாவ்லோவா கவிதைகள்
![]() |
| Artist: Guillermo Arias |
1
என்னைக் கொஞ்சம் நித்தியமாக்கு:
சிறிது பனியை எடுத்து
அதனுள் என்னைச் செதுக்கு.
உன் கதகதப்பான உள்ளங்கையால்
பளபளக்கும் வரை என்னை மெருகூட்டு...
2
இருவரும் காதலில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அவன்:
"நீ இங்கு இல்லாதபோது,
நீ சற்றுமுன்தான் வெளியே சென்றாய் என்றும்
அடுத்த அறையில்தான் இருக்கிறாய் என்றுமே
எனக்குத் தோன்றுகிறது"
அவள்:
"நீ வெளியே சென்று,
அடுத்த அறையில் இருக்கும்போது,
நீ இனி இவ்வுலகிலேயே இல்லை என்று
எனக்குத் தோன்றுகிறது"
3
ஒரு தற்காலிகச் சுயசரிதை:
மின்மினிப்பூச்சிகளைப் பிடித்தேன்,
விடியும்வரை வாசித்தேன்,
விசித்திரர்களுடன் காதலில் விழுந்தேன்,
வாளி வாளியாய் அழுதேன் காரணமேயில்லாமல்,
ஏழு ஆண்கள் மூலமாக
இரண்டு மகள்களை ஈன்றேன்.
4
குளிர்காலத்தில் ஒரு மிருகம்,
வசந்தத்தில் ஒரு தாவரம்,
வேனிற்காலத்தில் ஒரு பூச்சி
இலையுதிர்காலத்தில் ஒரு பறவை,
மற்ற நேரங்களில் நான் ஒரு பெண்.
*
வேரா பாவ்லோவா (1963)
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் கவிஞர். மாஸ்கோவில் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தனது குறுகத்தரித்தக் கவிதைகளுக்காக ரஷ்யாவில் பரவலாக அறியப்பட்டவர். If There Is Something to Desire, Album for the Young (Old) என இரண்டு தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன.

Comments
Post a Comment