பாத்திரம் கழுவுதல்
![]() |
| Artist: Hans Emmenegger |
சஞ்சலமான சமயங்களில் நான் பாத்திரங்களைக் கழுவத் தொடங்குவேன். மெதுமெதுவாகப் பாத்திரங்களும் தண்ணீரும் மட்டுமேயான உலகத்தின் கதவுகள் திறக்கின்றன. எல்லா அகராதிகளும் வற்ற ஆரம்பிக்கின்றன. வெறும் உலோக பாத்திரங்களா, எனது கதா பாத்திரங்களா? இடியோசையும் மின்னற்பிராண்டலுமாக அவ் உலோக வானம் முந்தைய பொழுதுவரைக்கும் ருசியின் மேகங்களால் மூட்டமடைந்திருந்தது, இப்போதோ ருசியின் சிதிலங்கள் மாத்திரமே. நீரின் கரம்பட்டதும் சில பாத்திரங்கள் கறைகளையும் அழுக்குகளையும் விட்டுக்கொடுக்கின்றன. என்னால் அப்படி முடிவதில்லை என்று சுரீரென அறிய நேர்கிறது. சிலவற்றுடன் நான் மல்லுகட்டவேண்டும். பிறப்பதற்கு முன்பே உண்டான என் முடிச்சுகளுடனும்தான். அப்போதெல்லாம் நெடுங்காலமாக எனக்குள் பூட்டிக்கிடந்த கதவுகள் ஒன்றன்பின் ஒன்றென முடிவற்றுச் சடார் சடாரெனத் திறக்கின்றன. அதாவது கதவுகளின் ஊற்று. ஒரு அறையில் நிழல்கள் பொங்கி வருகின்றன சுவர்களுக்குள்ளிருந்து. இன்னொரு அறையில் வேறொரு நிலக்காட்சி தொடங்குகிறது, ஆளுயரத்திற்கு நெடுநெடுவெனச் செழித்துவிட்ட புற்களின் ராஜாங்கம், பச்சையை விலக்கியபடி நீச்சலடித்து முன்னேற எதிர்ப்படுவது மற்றொரு அறை, ஆள் நடமாட்டமற்ற ஒரு ரசவாத கூடம். வருத்தங்களில், குருட்டு நம்பிக்கை கரைந்து, துளி அலையோசை கலந்ததும் பெயரிட முடியாத ஏதோவொன்று தங்கமாகிறது. சாளரத்துக்கு வெளியே கணக்கில்வராத அத்தனை திக்குகளுக்கும் ஒரு பரிசுப்பெட்டி போல திறந்துகிடக்கும் வெட்டவெளி. சாம்பல் வானம், மலைப்பாம்பு என நிலத்தின் மீது உடல்நீட்டி உற்றுக்கவனிக்கிறது, நானும் குட்டிச்செடியாகக் கவனிக்கிறேன். நேரம் மறைய மறைய, கழுவுத்தொட்டி பாழுங்கிணறாக மாற மாற, பாத்திரங்கள் மட்டுமல்ல எல்லாமே பளிச்சிட, உலகத்தின் வண்ணப்பூச்சுகள் உரிந்துவிழுகின்றன. பூமி என்னைச் சூழ்கிறது.
*

Comments
Post a Comment