மையல் வழி

Artist: Rene Magritte



1


சாது தனது மணிமாலையைத் தியானத்தில் உருட்டுவது போல

மழை தன் துளிகளை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டிருக்கிறது

ஆயிரம் மத்தியானங்களின் வருகையென 

இரண்டு உடல்கள் நின்றுகொண்டிருக்கின்றன ஏகாந்தத்தில்

ஜோடிகளின் திருநினைவில் 

சிருஷ்டி எனும் யுவதியை இறுக அணைத்து 

முத்தமிட்டுக்கொண்டிருக்கிறான் அழிவு எனும் இளைஞன்

காதல் ரகசியமாய் வேவுபார்க்கிறது தனக்குச் சாதகமாய் ஏதும் உண்டா என.

 

2


அசைவை நினைவெனவும் வடிவை காமமெனவும் கொண்டு

தூரத்து மொட்டைமாடியில்

ஆடிக்கொண்டிருக்கிறது ஒரு பெண்ணின் உள்ளாடை

என்ன தனிமை

எத்தனை இருட்டு. . .

நான் பார்த்ததும் ,

எதையோ உணர்த்த முயல்வது போல் மெல்ல மெல்ல 

அதை மொய்க்கிறது நிலவொளி.

குளிர். மின்மினிகள். சில நட்சத்திரங்கள்

 

3

 

மான்கள் சூழ்ந்து நிற்கின்றன,

இவனை அழைக்கிறாள் நதியின் அந்தக் கரையில் நின்றுகொண்டு.

உடலைத் தவிர்த்து யாவும் செல்கின்றன அவளிடம்,

அத்தனையையும் வழிநடத்தியபடி நதியில் இறங்குகிறாள் அவள்.

நீருக்கடியிலோ, 

சிருங்கார நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் ரதியும் மன்மதனும்

கொடிப்பாசிக்கூட்டங்கள் ஏகாந்தமாய்ப் பாடுகின்றன 

காமம் ஒரு குரல்தான் என்று.

 

4

 

காதலுக்குள் சில நிலவறைகள் உள்ளன

மேலும் சில நாற்காலிகளும் சில கத்திரிகோல்களும்

போனால்போகிறது என்று அந்நாற்காலியில் சில உடல்களும்

நம்பினால் நம்புங்கள்

ராத்திரியில் மட்டும் கைகள் இரண்டு வருகின்றவாம்

அவை ஒரு பெண்ணின் கைகள்தானாம் 

பிறகு கத்திரிகோல்களை வைத்துச் சரமாரியாக. . .

பகலில் சென்றால் நீங்கள்கூட பார்க்கலாம் 

நிலவறைகளுக்கு மேலே

ரத்தச்சிவப்பில் 

காதல் என்று எழுதப்பட்டிருக்கும் பதாகையை

ஜகத்தீரே எதற்கும் சற்றுக் கவனமாக இருங்கள்  

 

5

 

உனக்கு உடலை விட்டு

வெளியே செல்லவேண்டும் போலிருக்கிறது,

மழை இரவில் காடு மலை நீலம் கடந்து

உன் உடலின் விளிம்பிற்குச் செல்கிறாய்:

மெழுகுவர்த்திச் சுடருக்குள் தீக்குச்சி. ..

விளிம்பில் நின்றுகொண்டு 

வான நாளங்களைக் காண்கிறாய்,

மணித்துளிகள் வேறு ஊர்ந்துகொண்டிருக்கின்றன:

சுடருக்குள் ஒரு சுழற்பாதை. . .

உனக்குத் தெளிவாகத் தெரிகிறது, 

நீ படுக்கையில் புரண்டுக்கொண்டிருப்பதை 

நீயே மறைந்திருந்து பார்ப்பது.

பின் மெல்ல மெல்ல நீ நினைக்கத்துவங்குகிறாய்,

உடலுக்குள் செல்லவேண்டும் என்றும் 

புதிய உடல் வேண்டும் என்றும்


*

Comments