டிசம்பர் காற்று
![]() |
| Artist: Yutaka Murakami |
இம்முழுபிரபஞ்சத்திலும் முதல் முறையாக
ஏதோவொன்றை ஸ்பரிசித்த
தருணத்தினின்றுப் புறப்பட்டு,
மின்னல்களை ஈன்றெடுத்து,
வழியிலெல்லாம் நிலக்காட்சிகளால்
பாகம் பாகமாகக் கழற்றப்பட்டு,
இதயமிழந்து,
நீரில் மூழ்கிய குரல்களை அணிந்து,
பாழடைந்த இடங்களைக்
காற்றிசைக்கருவிகள் என உருமாற்றி,
வேப்ப மர இலைகளை
ஒவ்வொன்றாக எண்ணிமுடித்துவிட்டு,
ஆஸ்பத்திரி சன்னல் திரைச்சீலைகளை விலக்கியபடி,
எங்கோ தனியறையில் பின்னிப்பிணைந்த
உடல்களையும் உரசிக் கடந்து,
வரலாற்றின் நெற்றி வீக்கமென
முளைத்திருக்கும் இம்மலையுச்சிக்கு,
நெடுங்காலத்திற்குப் பிறகு
தொலைவின் நறுமணத்துடன்
வரும்
இந்த டிசம்பர் அந்திக் காற்று
நீதான் என்னைத் திறக்கும் சாவியுமா?
*

Comments
Post a Comment