நீல அவஸ்தை: சில கவிதைகள்
1
அவள்: நீல நிறத்தைக் கொதிக்க வைத்துவிடு
அவன்: இரவு வந்துவிட்டதே
2
இரவுக்கு லட்சக்கணக்கான வருடும் கைகள்
இருப்பதோ இரண்டு உடல்கள்
எல்லாவற்றின் மீதும் மேனி வெளிச்சம்
3
ஒரு உதட்டசைவு
பள்ளமாக்கிவிட்டது என் நிழலை.
4
இரவு ஓர் எலுமிச்சையைப் போல என்னைக் கசக்கிப் பிழிகிறது
நான் என்னை விட்டுவிட்டு
உலகை விட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறேன்
5
என் நாவு உன் நாவுக்கு கீழே,
இரண்டு கண்டத்தட்டுகள் நகர்கின்றன.
6
உன் பின்னங்கழுத்தில்
நான் முகாமிட்டுள்ளேன்
திரட்டிவந்த முத்தங்களுடன்
7
என் உதடுகள் உன் செவிகளில்
உன் கூர்நகங்கள் என் முதுகில்
அல்லி மலர்க்கூரைகளில் மழை.
8
உன் கால் விரல்நுனியில் உதடுகளைப் பதிக்கிறேன்
இன்னும் எத்தனை கோடி உலகங்கள் உள்ளனவோ
9
இந்தப் படுக்கை ஒரு காகிதம்,
நீயும் நானும் வார்த்தைகள்,
எழுத்துகள் கலைகின்றன ஒவ்வொரு அசைவுக்கும்,
வார்த்தைகளின் மத்தியானம் மெல்ல அந்தியை
நோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது
10
உன் காது மடல்களில்
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல என் வாய்.
சொற்களுக்குப் பதில்
என் மூச்சுக்காற்றைக் கேட்கிறாய்
அதிர்வுகளினூடே எனக்கு நீ பதில் கூறுகிறாய்
11
விரல்களால் தொடுகிறேன்
நாவால் தொடுகிறேன்
உன்னை ஒரு முறை தொடும்போது
நீ எப்படிக் கணக்கேயில்லாமல்
என்னைத் தொடுகிறாய்?
12
உன் உதட்டு வரிகள் திடுமெனச் சிறைக்கம்பிகள் ஆகின்றன
என் முழு உலகமும் சிறையிலிருக்கிறது,
ஒரு மதுரச் சிறை.
முகமூடியணிந்த மரம்
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்ததா?
13
உன் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும்
என் வாய் ஈரம்.
இன்னும் அது காயவில்லை
14
உன் உடலுக்குள் என் உடல் விழுந்துவிட்டது
அதோ
ஆழ
ஆழ
ஆழ
அது மூழ்குகிறது
நீர் வளையங்களுக்குப் பதில்
மின்னல் வளையங்கள்
15
நேற்று இரவு முழுதும்
நீ என் அறையாக இருந்தாய்
நான் சன்னல்களைக் கூட திறக்கவில்லை
16
காஃபியின் நறுமணம் என் ஒரு கையைப்
பிடித்துக்கொண்டது
ரோஜாவின் நறுமணம் மற்றொரு கையைப்
பிடித்துக்கொண்டது
உன் நறுமணம் என் மார்பின் மீது
தன் வாளிப்பான ஒரு காலை வைத்தபடி
நின்றுகொண்டிருக்கிறது
17
உன் நகங்கள் பதிந்த இடங்கள் காலத்துக்கு
வெளியே செல்கின்றன
உன் நகங்கள் பதியாத இடங்கள்
காலத்துக்குள் உள்ளன.
தபால் பெட்டியின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட கடிதம் போல
நான் மாட்டிக்கொண்டேனா?
என்ன விந்தை இது?
18
உன் அக்குளில் முகம் புதைத்திருக்கிறேன்
காற்றைச் சுவாசிக்கும் வழமையிலிருந்து
நான் விடுபடுகிறேன்.
உன் வாசனை,
என்னை உள்ளிழுக்கிறது,
வெளிவிடுகிறது.
19
கண்தொடும் நிலக்காட்சிகளை எல்லாம்
ஒரு கோதுமை ரொட்டியென கையில் எடுத்து
நெய்க்குப் பதிலாக
உன் வாசனையைத் தடவி
உண்ண முயலும்
இந்தப் பசி.
20
உடலில் ஆரம்பித்து
மொழியின் படித்துறைகளைக் கடந்து
நீ சுழித்துச் சுழித்து
எல்லா இடங்களிலும்
என்னை மூழ்கடித்தபடி
பாய்ந்தோடுவதை நான் பார்க்கவேண்டும்
இப்பொழுதே இந்நொடியே
உன் சில்லிடும் பாதத்தை
இந்தக் காகிதத்தில் வையேன்
21
உன் மார்புக்கச்சையின் ஒரேயொரு கொக்கி,
எல்லாவற்றுக்கும் கதவாக
என் முன்பு நிற்கிறது.
பரவசாதீதத்திற்கு முந்தைய தகிக்கும் கணம்
22
தகிக்கும் உன் மார்புக்கச்சை ஒரு பறவை தான் போல.
படுக்கை எனும் கிளையிலிருந்து
அது பறந்துவிட்டது
23
இரவுநேர நதியில் கிடப்பது போல உன் முலைகளில் ஆழ்ந்திருக்கையில்
உன் உதடுகளின் தனிமை என்னை வருத்துகிறது
உன் பின்னங்கழுத்தில் பயணத்தைத் தொடங்கும்போது
உன் முலைகள் என்னை அழைக்கின்றன
ஓரிடத்தில் இருக்கும்போது
உன் மற்ற அங்கங்கள் ஒவ்வொன்றும்
என்னை அழைப்பதுதான் என்னடி?
எனக்கு நிறைய உடல்கள் இருந்திருக்கலாம்
24
உன் முலைகளில் பற்களைப் பதித்தால்
இந்த அந்தரங்க இரவின் மீது
என் பற்தடம் பதிவதுதான் என்ன?
25
இன்று இரவு
உன் முலைகளே என் தெய்வம்
எச்சிலாலும்
மூச்சுக்காற்றாலும்
கைகளாலும்
தொழுகிறேன்
என் பிரார்த்தனைகளைச் சொல்கிறேன் இச்சையின் மொழியில்.
26
உன் முலைக்காம்பு ஒரு தூண்டில் முள்ளைப் போல
நெடுநேரம் என் வாயில் கிடக்கிறது
அதோ உயிர்
உடலைவிட்டுவிட்டு
மீன் வடிவில்
அகோர பசியுடன்
வந்துகொண்டிருக்கிறது
27
என் உதடுகளுக்கு நினைக்கத் தெரியும் போல.
உன் முலைகளில் வாழ்ந்த நாட்களை
உன் கீழ் உதடுகளில் நிகழ்ந்த விருந்துகளை
நினைத்துக்கொண்டிருக்கிறது
நான் என் உதடுகளை ஈரமாக்கிக்கொள்கிறேன்
28
உன் விரல்களால் என்னை வருடுகிறாய்
என்னைக் கூட அல்ல
என் பிறவிகளை வருடுகிறாய்
கறுப்பு வயலில் என்றுமில்லாத விளைச்சல்
29
நீ என் செவியினுள் விரலை நுழைக்கிறாய், எடுக்கிறாய்
நீ அளிக்கும் மோனமும்
இந்த உலகத்தின் இரைச்சல்களும்
மல்லுக்கட்டுகின்றன
நான் என் வியர்வைத்துளிகளால்
உன் விழிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எனக்குள் ஆங்காங்கே படீர் படீரென நீல நிறம் வெடித்துச் சிதறுகிறது
30
இந்த ஈர நாவு
கட்டக்கடைசியில்
ஒரு சிவப்பு நிற துணிதான் போல.
31
எழுதுகிறேன், வார்த்தைகள் மறுபக்கத்தில் பதிவதைப் பார்க்கிறேன்
என் உடல் உன் உடல் மீது பதிகிறது,
ஆனால் மறுபக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
என் உடல் உன் வழியாக எங்குதான் போகிறது?
32
உன் கூந்தலில் இருந்து வரும் இரவுகளில்
உயிரெழுத்துகள்,
ஒளிரும் மலர்கள்,
குளிர்,
மஞ்சள் வெளிச்சம் என
ஏதேதோ உள்ளன
தூக்கத்தை மட்டும் காணவில்லை
33
படுக்கையினின்று
என் தோள்களை
இரு கையால் பிடித்தபடி
நான்கைந்து நீண்ட முத்தத் தொலைவிலிருந்து
உனக்கு மேலிருக்கும் என்னைப் பார்க்கிறாய்
நம் ஏதேதோ பிறவிகளின் படுக்கையறைக்கு
வழிகாட்டும்
ஒரு வரைபடமா நான்?
34
நேற்று திடுமெனத் திரும்பிப்பார்க்கும்போது
ஏரியின் முகப்பில் வீற்றிருந்த
நம் அறை
என்னைப் பின்தொடர்ந்து
வருவதைப் பார்த்தேன்
இன்னும் நாம் உள்ளே இருக்கிறோமா
ஆடைகளின்றி
அந்தப் பட்டுப்பொன் வெளிச்சத்தில்?
35
இந்த அந்தி போல உன் உடல்
ஆங்காங்கே சிவந்திருந்தது என்றாய்
என் உடலின் எல்லைக்கோடுகள் அழிகின்றன மெதுமெதுவாக.
36
இன்னும் தொடுகையின் கரையில்
வந்து இறங்கவில்லை.
எனது கப்பலில் இருந்து பார்க்கிறேன்
உன் மேனிக்கும்
என் விரல்களுக்கும் இடையே சுறாக்கள்
வளைய வருகின்றன.
புயற்காற்றும் வீசுகிறது.
இது காமத்தின் கொடுங்கடல்.
37
நீயும் நானும் இங்கு வந்து நின்றோமா?
அறையின்
கண்ணாடிக் கதவு
முழுதும் நீராவிப்படலம்.
38
மழை தன் நனைந்த உள்ளாடையைக்
கழற்றி எறிந்துவிட்டு
கறுப்புத்துணியால் இரவின் கண்களைக் கட்டிவிட்ட கணம் அது
சட்டென எனக்கு நான்கு பேராக மாற வேண்டுமென்றிருந்தது
நால்வருக்கும் என் உருவம், என் குரல், என் வாசனை.
படுக்கையில் ஒரேநேரத்தில்
நான்கு பேரின் விழிகளைக்
காண முடியாமல்
பரவசத்தில்
நீ திணறுவதைப்
பார்க்க ஏன் இவ்வளவு விரும்புகிறேன்?
***
நன்றி: தடாரி இணைய இதழ்

கண்ணில் படித்து முடித்த பிறகு கண்ணீர் .
ReplyDelete