வீடு திரும்புதல்


Artist: Hans Emmenegger

நீ கண்விழிக்கிறாய் சாரல் மழையில்.

கைக்கெட்டும் அண்மையில் கண்ணாடிக்குவளைகள்,

நேற்றைய தாகத்தின் நினைவுச்சின்னங்கள் என.

நிழல்கள் காத்திருக்கின்றன சுவரில்.

வண்ண மலர்களும் நனைந்து பளீச்சிடுகின்றன,

கட்புலனாகாத கொண்டாட்டத்தின் விழாத்தோரணம்.

பக்கத்துவீட்டுச் சாளரம், உரசும் மரக்கிளைகள்,

ஈரமான காலணியை அணிந்தபடி

நீ வெளியில் குதிக்கிறாய்.

நான் வீசியெறியப்பட்ட எக்ஸ்-ரே தாளைக் கண்டெடுத்தேன்,

ஒரு மார்புக்கூடு, இதயம் எனும் புராதன விவகாரம்,

அங்குதான் உள்ளது ஆனால் தென்படவில்லை

சொல்லப்போனால் இதுபோன்ற அதிகாலைமழைப்போதில்

எல்லாம் இங்கு இருக்கின்றன

சற்றுநேரத்திற்கு முன்பு இங்கில்லாதவைகள் கூட.

கையடக்க நாவலில் இன்னும்

எழுபது பக்கங்கள் மிச்சமுள்ளன

அழுக்குப்பாத்திரங்கள் உள்ளன

ஓர் ஊழ்க அனுபவத்தைத் தருவதற்கென.

காயங்கள் உள்ளன.

மிக ஆழத்தில் ஊசியிருள் பொங்கும்

வெற்றிடப்பாழ், அதன் வெளவால் வீச்சத்துடன்.

விபத்து நடந்த இடம் முழுமையாகப் புங்க மர நிழலுக்குள்.

நீ இழந்திருக்கிறாய்,

சிறுகல்லும் கூடத்தானே 

இழந்திருக்கிறது தன் மலையை.

டீக்கடை பழைய பாடல் இருக்கிறது

ஏதோவொரு வரி போதும்தான் இல்லையா?

தேவாலய மணிநாதம் இருக்கிறது

நீ கேட்கிறாயா

ரீங்காரத்தின் மதுவில் திளைக்கிறாயா

பார்

அதே சாலைகள்

அதே மரவரிசைகள்

அதே நாம்

அதே உடைந்த தாடை

குப்பைத்தொட்டி இருக்கிறது

நம்மை மட்டும்தான் அங்கே கொட்டவில்லை

யார் யாரோ குடியிருக்கும் வீடுகளை

முகவரிகளின் மாயைகளை

கடக்கிறோம்

வழியிலெல்லாம் சொல் ஏங்குகிறது 

சொல்லப்படுவதற்கு.

ரத்தத்தில் ஒளிந்துகொண்டவர்களை

எங்கெங்கோ தேடுவது என்ன

அதோ மலைகள்,

முகில் வரிசைகள்,

நீலம்.

ஒவ்வொரு நொடியுமே ஒரு பறக்கும் கம்பளமாக

உன்னைச் சுமந்துசெல்லும் என

நீ இன்னுமா காத்திருக்கிறாய்

ஏக்கத்தின் நாடகத்திரையில் தீ எரிகையிலோ

உலகம் ஒரு முள்ளாக நம் தொண்டையில். 

இடையே

எல்லாவற்றையும் அடர்த்தியாக்கும் இம்மழைப்பொழுது,

நீ, நான் என எல்லைக்கோடுகள்,

ஆவி பறக்குமிந்த தேநீர் குவளை,

என் விழிகளை மூடுகிறேன், என்றோ பார்த்த நதிவெள்ளத்தை

நினைத்துக்கொள்கிறேன்.  

*

Comments