உன் கைகள்
![]() |
Artist: Wilhelm Maria Hubertus Leib |
ஏனென்று தெரியவில்லை
உன் கைகளை நினைத்துக்கொண்டிருக்கிறேன்,
மாலைவானைப் போல ஆங்காங்கே
சிவந்த கதகதப்பான உள்ளங்கையை,
அந்தப் பத்து விரல்களை,
முழுச் சமுத்திரத்திற்கும் வீசப்பட்ட கைரேகைகள் எனும் வலையை,
நெயில் பாலீஷ் மகுடமணிந்த நகங்களை,
நானிங்கு இலங்குகிறேன் எனும்
தெய்வீக உத்தரவாதத்தை அளிக்கும்
உன் தொடுகையை,
அப்புறம் உடலில் சம்பவிக்கும் நிலநடுக்கத்தை,
ஆழிப்பேரலைகளை,
மண்சரிவை,
எதிர்காலக் கீறல்களை, வருடல்களை
நினைத்துக்கொண்டிருக்கிறேன்...
உனக்குத் தெரியுமோடி?
மொழியின் நாட்காட்டியில் நான் தன்னந்தனியே
ஆயிரம் வருடங்கள் உழைக்கவேண்டியிருந்தது பின்பு உன் கரங்கள்
தோன்றின, யார் சிருஷ்டித்தது என அறிய முடியாத மகத்தான கட்டுமானம் போல.
உன் முகத்தை அல்ல
பின்னங்கழுத்தை அல்ல
சாளரத்திற்குப் பக்கத்தில் குளிர்காற்று துளைக்க
இதோ இந்த மீட்கவியலாத மாலைப்பொழுதில்
உன் கைகளை நினைத்தபடி
அமர்ந்திருக்கிறேன்,
வெளியே ஒரே மழை, மழை..
*
நன்றி: வேரல் இதழ்-1
Comments
Post a Comment