மான்சியர் செசான்

Artist: Paul Cezanne


வரலாறு ஒரு மதிகெட்ட ஒளிப்படக்கருவி.

சின்னஞ்சிறிய ஆப்பிளால்

பாரிஸ் நகரை திகைப்பில் ஆழ்த்திய

பால் செசான்

தன் அன்னையின்

இறுதி அஞ்சலிக்குச் செல்லவில்லை

என்பதையும் பெருமையுடன்

பதிவு செய்துகொண்டது,

அன்று மரங்கள்தான் நிகழ்வில் கலந்துகொண்டன.


நித்யத்தின் மலர்கள் ஆனால் சற்றுதொலைவாய் அகத்தில் தேன்கூடு,

மதுரத்திற்குப் பதில் நிலக்காட்சிகள்,

ஆப்பிள்கள், முகில்கள், வடிவங்களின் மரியனா அகழிகள்.

நட்சத்திரங்களின் மரணத்தறுவாயிலும்

ரோஜா பாதங்கள் 

பூமியில் அடியெடுத்து வைக்கையிலும் வெளிப்படும்

ஏதோவொன்று

அவரை அனுப்பிவைத்திருந்தது இங்கு.


ஆனால் வழியில் அவருக்குப் பசியெடுத்தது,

எலும்புகளில் குளிர் ரம்பமாக உரசிற்று,

நிறங்களின் பருவகாலங்களுக்குள் சாளர வெளிச்சமும் போதவில்லை, 

பழங்கள் அழுகும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது.

இருந்தபோதிலும் கித்தான் முன் நிற்கையில் மாத்திரம் அவர் உணர்ந்தார்

தேவாலயத்தில் நிற்பது போல.


பச்சையும் நீலமும்  முயங்கும்போது

அவர் கண்டது என்ன?

ஒருவராலும் சொல்லமுடியாது, ஏன் அவராலும் கூட.

தன் தூரிகையைக்

கறுப்பு வண்ணத்தில் ஆழ்த்துகிறார்,

தன் பற்களைக் கறுப்பாக்கிக்கொள்கிறார்.

கலை அணங்குகளுக்குத் தெரியாது,

மான்சியர் செசானுக்கு தெரியும்,

அன்று வரைந்த மொன்ட் செயின்ட் விக்டோயர்

மலைகளுக்கு அடியில்தான்

அவருடைய அன்னை கிறிஸ்துமஸ் கேக்

தயாரித்துக்கொண்டிருக்கிறாள். 

*

Comments