உலகில் சித்திரவதையாளர்கள் இருக்கிறார்கள் என்றபோதிலும்... - மைக்கேல் கோயெடி
உலகில் சித்திரவதையாளர்கள் இருக்கிறார்கள்
என்றபோதிலும் இசைக்கலைஞர்களும் உளர்.
இந்தக்கணத்தில், மனிதர்கள் சிறைச்சாலைகளில் அலறிக்கொண்டிருக்கிறார்கள்,
என்றபோதிலும்,
ஜாஸ் கலைஞர்கள் பேருவகையின் புயலை எழுப்புகிறார்கள்,
இசைக்குழுக்கள் ஆன்மாவின் மகிமையைப் பாடுகின்றன.
எல்லா இடங்களிலும் தெய்வ உருவங்கள் அவமதிக்கப்படுகின்றன,
என்றபோதிலும்,
மேற்கு கிளேரில் மனிதனொருவன்
கான்செர்டினா வாசிக்கிறான்,
செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயக் குவிமாடத்திற்குள்
சிஸ்டைன் பாடகர் குழு பரவசத்தில் மிதக்கிறது,
சாலையில் ஒரு குடிகாரன்
பாடிக்கொண்டிருக்கிறான் காரணமேயிலாமல்.
**
மைக்கேல் கோயெடி (1939-2024)
ஐரிஷ் கவிஞர். புகைப்படக் கலைஞர். மேலோட்டமான வகையில் இவரது கவிதைகளை இடம் குறித்த ஆழ்ந்த உணர்வில் மையம் கொள்பவை என்று கூறலாம். தனிநபர் வரலாறும் இடத்தின் வரலாறும் முயங்கும் கவிதைகள் கோயெடியினுடையவை. Over Lane, All Souls என ஆறுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.
Comments
Post a Comment