முள்
Artist: Alex Colville |
மரங்கள் தீப்பந்தங்கள் போல தகதகப்பதைப் பார்த்தேன்
சாயங்கால வானம்
என் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டதா என்ன?
சற்றுநேரத்திற்குள் நான் எனை
நேசித்த ஒருவரை வேண்டுமென்று
காயப்படுத்தினேன்,
வருத்தம் போல ஒன்று.
சிறுவயதில் வண்டிச்சக்கரங்களைச் சுழற்றியவாறு
ஓடித்திரிந்த தெருக்கள்
பைய நடக்கிறேன்
எந்த வார்த்தையினால்
யாவும் ஒரு பிரார்த்தனையாக மாறுமோ
அந்த வார்த்தையை முணுமுணுத்தபடி.
விளக்கு கம்பத்துக்கு அடியில்
குவிந்துகிடக்கும் ஈரப் புகைப்படங்கள்
மொத்த வாழ்க்கையும்
விசிறியெறியப்பட்டிருக்கிறது
எதையும் சேகரிக்கவில்லை இம்முறை
இருள் ஒரு ஆள் போல
பின்தொடர்ந்து வருவதைத்
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
நடந்துகொண்டிருக்கும் ஒருவன்
இங்கு எங்கோதான் இருக்கவேண்டும்.
ஆனால் நீ அண்ணாந்து பார்க்கையில் மாத்திரம்
உன் விழிகள்
நட்சத்திரங்களும் அப்பாலும் பிரதிபலிக்கும்
நிச்சலன ஏரி
என்ன இருந்தாலும் இந்நிலவொளியில்
இப்போது எல்லாமே
வெறும் உணர்வுகள்தான்.
வெறும்
உணர்வுகள்.
*
Nice Surya😊😊
ReplyDeleteநன்றி! நன்றி!
Delete