பெயர்


Artist: Tomas Sanchez


அது வருகைப்பதிவேடுகள் எதையும் பராமரிக்காத மலையுச்சி. காற்றில் மிதந்துகொண்டிருந்தது ஒரு காகிதம். நானதை எம்பிக்குதித்துப் பிடித்தேன், எதிர்பாராதவிதமாக. சிறிய ஆனால் செளந்தர்யமான கையெழுத்தில் காதல் மினுங்கும் சில வாக்கியங்கள், எனக்கென எழுதப்பட்டதைப் போல வாசித்தேன். நெடுநாளுக்குப் பின் வரிசையாக அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தன. உப்பின் வெண்மை முடிந்து இவ்வுலகம் தொடங்கும் எல்லைக்கோட்டுக்கு அருகில் அறுபது சதவீதம் பதட்டத்தாலும் மீதி ரகசியத்தாலும் எழுதப்பட்ட ஒரு வார்த்தை. அதுவும் மிக மிகச் சிறிய எழுத்தில். அநேகமாகப் பெயராகத்தான் இருக்கவேண்டும். மார்கழியின் சாயங்கால மங்கலில் சிரமப்பட்டுப் படிக்க முயல்கையில் சடாரெனக் காற்றில் தப்பியது. பிறகு மேகங்களின் நிழல் விழும் காடுகளுக்கு மேலே அது பறப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்புறம் வருடங்கள் பல கடந்துவிட்டன.

இன்றும் எப்பவாது அவ்வப்போது அந்தப் பெயர் என்ன என்று யோசித்தபடி பெயர்களின் மழைப்பொழிவினூடே நடக்கிறேன். உனது பெயரை கோடிட்ட இடத்தில் நிரப்பி ஒரு மர்மத்தின் கொடும்பற்களிலிருந்து தப்பிக்கும் மாய நிம்மதியிலும் கூட இந்நாட்களில் அவ்வளவாக ஆர்வமில்லை. நான் கோடிக்கணக்கான பக்கங்களைப் புரட்டலாம்; நடமாடும் அதல பாதாளம் என எண்ணற்ற தொலைவுகளைக் கடக்கலாம். ஆனால் அந்தப் பெயரை மட்டும் இனி அறிந்துகொள்ளமுடியாது. 

இதோ மறுபடியும் அதே மலையுச்சிக்கு வந்திருக்கிறேன். சிற்பங்களில் இன்னும் ஈரம், மழை வரும்போல, மண் வாசனை. சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டபடி நான்கைந்து சிறுவர்கள் கையில் சிவப்பு பலூனுடன் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்தேன். நான் ஏன் நிறையப் பேய் படங்களைப் பார்க்கிறேன் என்று அப்போது எனக்குப் புரிந்தது.

*

Comments

  1. அருமை. பிறந்தநாள் வாழ்த்துகள் திரு. சூர்யா!

    ReplyDelete

Post a Comment