புரிந்துகொள்ளுதல் உண்டாகுக!


நண்பர்களுக்கு வணக்கம்,

நான்கைந்து நாட்களுக்கு முன்பு கரவாஜியோவின் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இம்முறை ஓர் அம்சம் தென்பட்டது. வன்முறை, சூது, அலறல் என எல்லாமே கரவாஜியோவின் ஓவியங்களில் உறைந்திருக்கின்றன. ஆனால் கதாபாத்திரங்களின் பின்னணியில் ஏதுமில்லை. செவ்விருட்டு அல்லது விநோதமான ஒரு வெளி மாத்திரமே. ஏதோ வேறு எங்கிருந்தோ வந்தவர்கள் போலதான் எல்லா கதாபாத்திரங்களும் அங்கு நிகழ்கின்றன. உடனே கவிதை எனும் நிகழ்வு எனக்கு ஞாபகம் வந்தது.

நண்பர்களே இங்கே நான் தூய கவிதை குறித்துப் பேச முற்படவில்லை. ஆனால் கவிதைக்கு கவிதையே முக்கியம் என்பதைத்தான் நான் நினைவூட்ட விரும்புகிறேன். கவிதை நாம் சவாரி செய்யும் குதிரையாக மிக அரிதாகவே இருந்திருக்கிறது. வரலாற்றுக்கு கவிதையை அல்லது கலையை அடிபணிய வைக்கும் எவ்வளவோ முயற்சிகளைப் பார்த்திருக்கிறோம். பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனினும் இந்த உரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கூட எங்கோ தொலைவில் யாரோ ஒருவன் தனது அந்தரங்கமான உணர்ச்சிகளுடன் காகிதத்தில் தனித்திருக்கும் காட்சி ஒன்று எழுகிறது. அவன், காகிதம், எழுதுகோல். உலகம் அவ்வளவு சிறியதுதான். 

கவிதை எல்லாவற்றையும் குறித்துப் பேசுவதான தோற்றம் தருவது கூட ஒரு பாவனை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிதை எப்போதும் வேறொன்றைச் சொல்கிறது. உலகத்தினுடைய மொழியினுடைய இலக்கணம் எங்கெல்லாம் நெகிழக்கூடியது என்பதை கவிதைதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆகவே என் வருத்தங்கள், என் சஞ்சலங்கள் கவிதைக்கு முக்கியமில்லை என்பதையே என் எழுதும் முறைமை சார்ந்து புரிந்துகொண்டிருக்கிறேன். எழுதியதை வாசித்த வாசகன், "இது என்னுடையது, உங்களுடையது அல்ல" என்கிறான். ஆகவே கவிதை ஈவு இரக்கமில்லாததும் கூட. 

இன்று லெளகீகமான அத்தனை அபிலாஷைகளையும் கவிதையின் கையில் அளிக்கலாம் என்று முயல்கிறோம். சிலநேரங்களில் கவிதையும் அவற்றை வாங்கிக்கொள்கிறதுதான். பக்தி இலக்கியக் காலகட்டத்தில் பக்தி, இறைமை போன்ற அம்சங்களையும் விடுதலை போராட்ட காலத்தில் தேசப்பற்று, புரட்சிகரக் கருத்துக்கள் போன்றவற்றையும் உள்வாங்கிக்கொண்டது போல. ஆனால் கவிதையிடம் எதைத் தன்னுள் வைத்துக்கொள்ளவேண்டும் என ஒரு தேர்வு இருப்பதாகவே தோன்றுகிறது. எத்தனையோ சித்தாந்தங்கள், கோட்பாட்டு விவகாரங்கள். கவிதை பெரும்பாலானவற்றைத் தரையில் வைத்துவிட்டதையே பார்க்கிறோம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் கவிதை மிகவும் தன்னிச்சையானது. கூடவே மிகவும் பழமையானது. மற்ற துறைகளில் எட்டப்படும் வெற்றி, ஸ்திரத்தன்மை போன்ற விஷயங்கள் உந்தித்தள்ளுகின்றன நம்மை. அதனால் வேகம் வேண்டும், துல்லியம் வேண்டும். ஒருகோணத்தில் இருட்டும் வேகமும் ஒன்றுதானே. இரண்டிலும் தெள்ளத்தெளிவாக நம்மால் பார்க்கமுடிவதில்லையே. அனுபவத்தின் கண்ணாடியில் நம்மைக் காணும் வாய்ப்பு அநேகமாக அமைவதில்லை. ஆகவே நாம் புரிந்துகொள்ளும் ஆற்றலிலிருந்து தூரம் சென்றுவிடுகிறோம். ஒளி உண்டாகுக என்பது என்ன? புரிந்துகொள்ளுதல் உண்டாகுக என்பதுதான். 

இதையொட்டி ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நாகர்கோவில். ஒரு கடுமையான மழைநாள். நான் வழக்கம்போல குடையுடன் நடையைத் தொடர்கிறேன். ஓரிடத்தில் ஈரப் பச்சை வயல்கள். மண் வாசனை. தூர மலைகள் முகில்களைப் உடுத்திக்கொண்டு பாதிரியார் போல நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றன. காற்று அடிக்கும்தோறும் புற்கள் அலைகள் போல வருகின்றன பின் மறைகின்றன. ஒருகணம் நான் கடற்கரையில் இருப்பது போல ஒரு பிரமையை அடைந்தேன். பச்சை வண்ண அலைகளின் சமுத்திரம். பச்சை ஆழம். வேர்கள் அத்தனையும் மீன்களாக இருந்திருக்கவும் கூடும். யார் அறிவார்? மொழியின் சிறையிலிருந்து திடீரென விடுதலை அடைந்த ஒருவன் கண்ட காட்சி. என்ன அழகு! ஒருகணம் இப்படி என்னைப் உணரச் செய்தது எதுவோ அதன் பேரில் தாங்க முடியாத பக்தியுணர்வு ஏற்பட்டது. நான் அன்றாடம் நடக்கும் இடம் இவ்விதம் புதிதாக மாற முடியும் எனும் சாத்தியம் சார்ந்த ஒரு நன்றியுணர்ச்சி. விசுவாசம் என்ற சொல்லும் நானும் வேறல்ல என்பது போல. 

வீட்டுக்கு வந்ததும் நாட்குறிப்பில் இப்படி எழுதி வைத்தேன்: "எந்தக் காரணமுமில்லாமல் எந்த நோக்கமும் இல்லாமல் ஆழ்ந்து அவதானிக்கும்போது நம் ஆழுள்ளத்துக்கு இன்பமும் துன்பமுமான ஒரு காதல்தருணத்தை அளிக்கிறோம். நம் ஆழுள்ளமும் உலகமும் பிரியத்துடனிருக்கும் பொன்நேரங்கள். அது அநேகமாக கவிதையின் பொழுதுதான்." அழகை காணும்தோறும் நாம் ஆன்மாவிற்கு அருகில் சென்றுவிடுகிறோம். அந்த அமைதி, அந்த விழிப்புணர்வு.  எவ்வளவு அழகு இது என்ற பிரார்த்தனை. நண்பர்களே இது உடைந்த உலகம்தான். ஒருவகையில் மர்மம்தான் நம் அன்னை; பயங்கரம்தான் நம் தந்தை. ஆனாலும் கூட நாம் நம்பலாம் "அழகு நம்மைக் காக்கும்". இப்போதும் இங்கே ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன்: திகைப்பும் வியப்பும் நன்றியுணர்ச்சியின் கதகதப்பும் நிறைந்த தருணங்கள் வாழ்க! 

நண்பர்களே காலத்துக்கும் கற்பனையாற்றலுக்குமான கட்புலனாகாத யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. காலம் அனைத்தையும் விழுங்குகிறது; கொல்கிறது. கற்பனையாற்றல் அனைத்திற்கும் உயிர் அளிக்கிறது; உருமாற்றுகிறது. இந்த யுத்தத்திற்கு முடிவில்லை என்பதையும் நாம் அறிகிறோம். இந்த யுத்தத்தில் ஏதேனும் ஒரு தரப்பில் நிற்க முடியுமா? இது அடிப்படையான வினா. 

***

இந்நேரத்தில் நான்கு பேரைக் குறித்து இங்குச் சொல்லவேண்டும். கோணங்கி, லக்ஷ்மி மணிவண்ணன், கண்டராதித்தன், ஷங்கர்ராம சுப்ரமணியன். இன்று இங்கிருக்கக்கூடிய நான் இவர்கள் இல்லையென்றால் தோன்றுவதற்கு ரொம்பக் காலம் ஆகியிருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இவர்களை என் தொடக்க காலத்தில் சந்திக்க முடிந்தது என் நல்லூழ். லக்ஷ்மி மணிவண்ணனுடன் நாகர்கோவிலில் வண்டியில் பேசியபடி சுற்றிக்கொண்டிருந்த அந்தக் கொஞ்ச காலங்கள். கோணங்கியை குறித்து என்ன சொல்வது? ஒரேயொரு கவிதையை எழுதியவனைக் கவிஞர் என பார்க்கும் அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தவர் அவர். தொடக்க காலங்களில் இது என்ன மாதிரியான உத்வேகத்தை ஒரு அமெச்சுரான கவிக்கு அளித்திருக்கும் என்பதை வார்த்தைகளில் சொல்லமுடியாது. கண்டராதித்தன் அப்புறம் ஷங்கர்ராம சுப்ரமணியன். இவர்களால்தான் இந்தச் சரியான இனிய வழிதவறல் நடந்திருக்கிறது. இல்லையென்றால் வேறு எங்கோ தொலைந்து அநேக காலங்களை ஆற்றலை நான் வீணடித்திருப்பேன். எப்போதும் உடனிருக்கும் நண்பர்களை இப்போது இங்கு நன்றியுடனும் பிரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். 

இங்கு என் கவிதைகளைக் குறித்துப் பேசிய கவிஞர் க.மோகனரங்கன், கேரளக் கவி செபாஸ்டியன், மதார் மற்றும் ஜெயமோகன் அவர்களுக்கும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதினை என் கவிதைகளுக்கு அளிக்கும் ஜெயமோகன் அவர்களுக்கும் கவிதா சொர்ணவல்லி அவர்களுக்கும் விஷ்ணுபுரம் வாசகர்வட்ட நண்பர்களுக்கும் என் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*

[குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதை முன்னிட்டு, ஏற்புரையாக வாசிக்கப்பட்ட கட்டுரை]


Comments