கரவாஜியோவின் ஓவியப் புத்தகத்தை நள்ளிரவில் பார்த்துக்கொண்டிருந்தபோது

Artist: Caravaggio


இது முற்றிலும் வேறு, ராப்பகல்களின்

நறுமணப் புட்டிகளினின்று அல்ல

வேறெங்கிருந்தோ வருகிறது

இம்முகவரியற்ற இருள்.


கைப்பிடியளவு நிழல், சிறிது குருதி, நிறைய ஏக்கம், நிறைய நிறைய ஓலம்,

இப்போது இருள்தான் தேவாலயம்

வண்ணங்களின் அல்லேலூயாக்களுக்கிடையே 

அங்கே வேதனைகள் பிரகாசிக்கின்றன மெழுகுவர்த்திகள் என.

இதோ அவர்கள் எனைப் பார்க்கிறார்கள் 

நித்தியத்துவத்தின் தொலைவிலிருந்து.


ஒரு தாங்க முடியாத ஆசை

இவ்விரவு முழுதும் எனக்கும் முள் மகுடம் வேண்டும்

என் ஆன்மாவை பணையம் வைத்து

இழந்து

திக்கற்றுத் திரிய

நூறு நூறு புயலெழும் ஒரு ரகசியப் பாலைவனம்

வேண்டும். 


ஓவியப் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டுகிறேன்

உலகம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது,

இதுதான் கட்டக்கடைசி,

ஒரு மரக்கூடை

கூர்ந்து பார்க்கிறேன்.

புழுக்கள் சுரங்கம் தோண்டுகின்றன கனிகளில்.

இன்னும் கனவு கலையவில்லை மஞ்சள் மற்றும் அடர் பச்சைக்கு,

சிவப்பு தன் விடலைப்பருவத்தில்,

கருநீலமா கருமையா? கனவா நனவா?

வெளிச்சத்தின் ஆம் இல்லைகள்

அத்தனையும் நங்கூரமிட்டுள்ளன அழகில்.

இங்கோ வெறும் இருமலொலி,

மழை ஓய்ந்த பிறகான அமைதி,

கூடவே நான்.

சிலந்தியும் தன் வலைக்கு

திரும்பிக்கொண்டிருக்கிறது. 

*

Comments