பழைய கோவிலில் ஒரு சாயங்காலம்
Artist: Alphonse Osbert |
நம் இருப்பே பாற்கடலா
இம்மாலைப்பொழுது கயிறா
நித்திய ஏக்கம்தான் மந்திர மலையா
நாம் நூறுநூறு நபராக
இரண்டு பக்கங்களிலும் நிற்கின்றோமா?
விழிகளை மூடிக்கொள் அன்பே
இந்த உடைந்த உலகம் ஒரு கை எனில்
நம் காதல் இன்னொரு கை
இதோ கரங்குவித்து ஒரு பிரார்த்தனை
சாரல் மழையில் பைய
நடக்க ஆரம்பிக்கிறோம், வழியில்
எல்லா சிற்பங்களிலும் ஒரு மர்மப் புன்னகை
செவிகளுக்குள்ளோ
மங்கிய மாலைவெளிச்சத்தின் நதிக்கரையில்
மின்மினிகள் துணையிருக்க
நீ காத்திருக்கும்
வேறு ஏதோ காலத்தின் இடையறாத அழைப்புகள்
என் உடல் உன்னை நோக்கிப் புறப்படும்
ஒரு படகு என மாறுவதற்குமுன்
வா, இங்கிருந்து மறைந்துவிடலாம்
*
நன்றி: கல்குதிரை-38
அழகு! . வாழ்த்துகள் சூர்யா! விஷ்ணுபுரம் விருது பெறும் உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
ReplyDeleteநன்றி! 😇
Delete