இந்தக் காலங்கள்



இனி நீதான் நான் வாழ்வதற்கு ஏற்ற

ஒரே நாடு என உணரும் காலங்கள் என்று

இந்நாட்களைக் கூறிவிடலாம்.


உன் பெயரினுள் உள்ள

ரகசிய திராட்சைத் தோட்டங்களில்

சுற்றித்திரிவதில்தான்

எவ்வளவு இனிமை.


அவ்வப்போது காரணமேயிலாமல்

உன் அண்மையைக் கற்பனை

செய்கிறேன், ஏன் மறுகணமே

நூற்றுக்கணக்கான பறவைகளின்

சிறகசைப்பைச் செவியுறுகிறேன்


ஆகாயத்தால் நிரம்பியிருக்கிறாயா என்ன? 


சாயங்காலங்களில் கதையே வேறு

மலையடிவாரங்களில் நிழல்கள் பரவப் பரவ

என்னில் நீ வளர்கிறாய் மதுவின் போதை போல.


சாத்தியமின்மை நம்மைப் பார்த்து முறைக்கிறது.

*

Comments

Post a Comment