முறிந்த கிளை
![]() |
Artist: M. C. Escher |
அதன்பிறகு
உனக்குத் தெரியாமல் நீ வசித்த
எல்லா முகவரிகளும் சூறையாடப்பட்டன
அசைவுகளும் உன்னைக் கைவிட்டன
குருதி விடுமுறை எடுத்துக்கொள்ள
உன் விடைபெறல்
ஓர் ஒலிபெருக்கி போல கூவியது
அந்தக் கருங்குயில் அமர்ந்திருக்கும்
கிளையையே முறித்தாகவேண்டியிருந்தது
இனி ரத்தமும் சதையும் அஸ்தமித்து
நினைவின் தசை விடியும் ஒரு சரீரத்தைப்
பெறுவாய் அல்லது இன்னொரு உடலுக்குள்
நீ திடுமெனக் கண்விழிப்பாய்
உனது இரண்டாவது நிழலுக்கு
தெளிவான நாட்கள் அளிக்கப்பட்டிருக்கலாம்
யாருக்குத் தெரியும்
நீ திரும்பிவர முடியாமலே போய்விடலாம்
பெயர் நீக்கப்பட்டுப் பெயர்ச்சொல் வினைச்சொல் அற்ற
வேறொரு மொழியின் ராஜாங்கத்தில்
நீ முதலிலிருந்து ஆரம்பிக்க நேரிடலாம்
ஒருவேளை தொடக்கத்தின் வேர்கள்
மிச்சமற்றுப் பிடுங்கப்பட்டு
முழுமையாக முற்றும்பெற்றுவிடலாம்
அது வெண்ணிற உலகமா
இரவுகளின் பிறந்த வீடா?
மொழியின் அவுஜா பலகையின் முன்னிருக்கும்
இவனிடம்
நீதான் சொல்லவேண்டும்
சாளரத்துக்கு அப்பால் ஒவ்வொரு மரங்களும்
ஏதோ ஆயிரமாயிரம் பாராசூட்டில்
மரணத்தின் படைவீரர்கள் தரைக்கு
வந்துகொண்டிருப்பதைப் பார்ப்பது போல
இடி முழக்கத்தைச் செவியுறும் இவ்வேளையில்
ஏன் இந்நாற்காலிக்கு அருகில்கூட
நீ இருக்கலாமோ
குறைந்தபட்சம் கட்புலனாகாத
கண்ணாடிச் சுவருக்கு மறுபக்கத்திலேனும்.
நான் பார்த்திருக்கிறேன்
நத்தை மறைந்தபின்னும் எஞ்சியிருக்கும் கூடுகளை.
பேசு
உன் வெற்றிடத்தை
கட்டக்கடைசியில் இப்படித்தான்
சொல்லவேண்டுமா
பேசு
இங்கு எங்காவது இருக்கிறாயா?
*
நன்றி: கல்குதிரை-38
Very Nice surya🙂
ReplyDeleteநன்றி!
Delete