தொலைவிலிருந்து பார்த்தல்
PC: Michael Ackerman |
கல்லூரி படிக்கையில் அவன் காசிக்கு ஓடிப்போனான்
இனி திரும்பிவரக்கூடாது என.
படித்துறைகள் தகித்தன
கங்கை நீர் ஊசியாகத் துளைத்தது
ஊருக்குத் திரும்பும்போது
முதியவரொருவர் தன் நண்பரிடம்
ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தான்
விரக்தியான குரலில் பேச்சுக்கிடையே
காசியைச் சுற்றிப்பார்க்க வந்தவரை
காசி சுற்றிப்பார்த்துவிட்டது என அவர் உரைத்தது
இன்னும் உக்கிரமான மெளனத்தினுள் அவனை வீசியெறிந்தது
மறுநாள் ஊரில்
வாரணாசித் தெருக்களைக் கண்டான்
மாலைநேரப் படிக்கட்டுகளில் அமர்ந்து
மணிகர்ணிகாவின் படித்துறையில்
விறகுகளோடு விறகாகத்
தன் சடலம் எரிந்துகொண்டிருப்பதைப்
பார்த்தான்.
*
Comments
Post a Comment