வெளவால் பாதை
Artist: Vilhelm Hammershoi |
இது நள்ளிரவு 02.35
விழித்திருப்பவர்கள் மண்வெளி வீரர்களாகிறார்கள்
சொந்த முகமே முகமூடியாக,
உலோக கைகளை அசைத்தபடி,
நிழல்கசிய, பூமியில் உலாவுகிறார்கள்,
தண்ணீருக்குப் பதிலாக உறக்கத்தைத்தேடி.
சிலர் சொப்பனச்சுரத்தினின்று சற்றுமுன்தான் விழித்திருக்கவேண்டும்
வியர்வையைத் துடைத்துவிட்டு படுக்கையின் மலைச்சரிவுகளிலிருந்து
பைய இறங்குகையில் சொந்த நிழலின் விழிகளைச்
சந்திக்கிறார்கள் நேருக்கு நேரென
நாளை ஏதேதோ பில்களைச் செலுத்தியாக வேண்டும் சிலருக்கு
(உடல் கூட ஒரு ரசீது;
ஊழின் கல்லாப்பெட்டியின் முன்பு
நின்றபடியிருக்கிறார்கள்.)
ஆனால் பாக்கெட்டிற்குள் பள்ளத்தாக்கு விரிந்துவிட்டது
ஒலியல்ல உருவமே எதிரொலிக்கும்படிக்கு
இன்னும் மனைவி வீடு திரும்பவில்லை ஒரிடத்தில்
ஏன் அவனும்தான் திரும்பியிருக்கவில்லை
நரக வட்டங்களில் லாந்திக்கொண்டிருக்கிறான்
ஆனால் ஏராளமானோருக்குப் பிறந்தநாள் தொடங்கியிருக்கும்
கூடவே நினைவுநாள்களும்
கொசுக்கடியிலும் குளிரிலும் வெட்கையிலும் மேலும் தானொரு இடம் என்று
மறந்துபோன இடங்களிலும் என
சந்தோஷத்திலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில்
வக்கற்று விழித்திருக்கிறார்கள் இன்னும் சிலர்.
ஆச்சர்யமாகப் பேருந்தின் சன்னலோர இருக்கையிலிருப்பவளுக்கு
அருகிலிருந்து வரும் தூக்கத்தில் உளறுபவரின் குரல் ஆறுதலளிக்கிறது
எனினும் எங்கோ ஒருவர் வீட்டைவிட்டு ஓடுவதற்கானச்
சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கையில்
போர்னோகிராபி தளத்திலிருந்து பத்திரமாக
துறைமுகத்துக்கு வந்துவிட்டது ஒரு கப்பல்.
மாத்திரை வாங்க பணமில்லாத மத்திய வயதுக்காரி
மருந்துக்கடையை வெறிப்பது போல பதினைந்தாவது மாடியின்
சாளரத்திலிருந்து ஒருத்தி நிலா பார்க்கிறாள்
அது சுவரில் முட்டிக்கொண்ட நெற்றியெனப் புடைத்திருக்கிறது
படுக்கை, குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த மனைவி,
சுவர்கள், மொட்டைமாடி,
தொட்டிச் செடிகள், தெருவிளக்குகள்,
ராத்திரி வானம், தரை என
நம் புது மாப்பிள்ளைக்கு எல்லாமே காணாமல் போய்விட்டது.
ஹோட்டல் ஆனந்தாவிலோ கதையே வேறு
நாற்பது வயதுக்காரனொருவன்
பக்கத்து அறையில் ஒலிக்கும் முனகல்களைச் செவியுற்றபடி
குளிரில் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறான்
நாம் நன்கு அறிவோம் குளிரால் மட்டும் அவன் விதிர்விதிர்க்கவில்லையென.
யாரோவொருவர் விட்டத்தைப் பார்த்து எண்ண ஆரம்பித்திருக்கிறார்
ஒன்று, இரண்டு, மூன்று... என.
உப்புக்காற்று முகத்தில் அறைய
வெகுதூரத்தில் இந்து மகா சமுத்திரம் எனும் முடிவற்ற வானொலியில்
விதவிதமான அலை வரிசைகளில் பழைய பாடல்களைக் கேட்டபடி
கன்னியாகுமரி விழித்திருக்கிறாள்
தலையணைகள் கூட பலிபீடங்களாக மாறும் நேற்றுக்கும் நாளைக்கும்
முறைதவறிப்பிறந்த இந்நேரத்தில்
அவளுக்குத் துணை கொடுப்பது நட்சத்திர நிறை வானம்
கழுவுத்தொட்டியில் மாத்திரமல்ல, எல்லா இடத்திலும் அடைப்பு
நூறு வகைப் பசிகளுக்கு எதிராகத் தனிமையில்
வேகவைக்கப்படும் பதார்த்தங்கள்
ஏனோ தன்னை நினைவூட்டுவதால் பழிவாங்கப்படும் சாம்பல் கிண்ணங்கள்
விடியற்காலைக்கு இட்டுச்செல்லும் என
நம்பிக்கையோடு பார்க்கப்படும் திரைப்படங்கள்
(ஒளிரும் திரைகளினூடே அரிதாக கதாபாத்திரங்கள் பார்க்கின்றன:
கடவுளே, யாரிவர்கள்?)
சாலையை வருடும் ரோந்து வாகனங்களின் ஜிகினா வெளிச்சம்
மயானத்து ஆந்தையின் கண்களுக்குள்
கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருக்கும் மரித்த ஆத்மாக்கள்
சுழலும் பார்வை வளையங்கள்
அப்புறம் இதோ இங்கே குழாயினுள் குருதி
அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியில் அவன் அமர்ந்திருந்தான்
கால்களைத் தரையில் வைக்க முடியாதவனாக
காலத்தின் ஓங்கரிப்புகளின் முன்
அரைக்குமட்டலோடு.
சேவலின் கூவலாலும் காய்ச்சலுற்றுவிடும்
பலவீனமான இந்த இரவு
அவன் இமைகளில்
கூடாரமிட்டிருந்தது யுத்தத்திற்காக.
விளக்குகள் பிரகாசமாக எரிந்தன ஆனாலும் இருட்டாக இருந்தது
காயத்திற்கான ஒத்தடம் போல நாளை வருமா?
*
நன்றி: கல்குதிரை 36 - முதுவேனிற்கால இதழ்
விடியற்காலைக்கு இட்டுச்செல்லும் என
ReplyDeleteநம்பிக்கையோடு பார்க்கப்படும் திரைப்படங்கள்-Exactly me. Beautiful poetry surya 😍
ஆ! நன்றி! நன்றி!
Delete