காட்டு வாத்துகள் வானில் பறந்துகொண்டிருந்தன - யான் காப்லின்ஸ்கி
Artist: Bruno Liljefors |
காட்டு வாத்துகள் வானில் பறந்துகொண்டிருந்தன
கூட்டம் கூட்டமாக
வடகிழக்கிலிருந்து தென்கிழக்கிற்கு.
மஞ்சளும் சிவப்புமான இலைகள்
ஏற்கனவே உதிர்ந்த இலைகளின் மீது
விந்தையான சப்தத்துடன் விழுந்துகொண்டிருந்தன.
அவ்வளவு நிச்சலனம். காற்றேயில்லை.
செங்குத்தாக உயர்ந்துகொண்டிருந்தது புகை.
அமைதி. திடீரென நான் கவனிக்கிறேன்:
வெட்டுக்கிளிகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை.
அவை மரித்துவிட்டன
இரவுப்பனியினாலோ
எங்களது பாதையைச் சகதிவரிகளாக
மாற்றிய இடைவிடாத மழையினாலோ
கொல்லப்பட்டுவிட்டன.
இப்போது எனக்குத் தெரியவில்லை
காட்டு வாத்துகளே உங்களுடன் தெற்கே செல்ல நான் விரும்பியிருப்பேனா
அல்லது காய்ந்த புற்களில் மரித்துக் கிடக்கும் வேனில் வெட்டுக்கிளிகளே உங்களுடன்
மௌனித்திருக்க விரும்பியிருப்பேனா என்று.
*
Comments
Post a Comment