டிசம்பர்
Artist: Adriaen Coorte |
சாயங்கால வெளிச்சம் முன்னேறுகிறது தனது படைகளுடன்
வெகுதூரத்தில் மலைகள் கொடியுயர்த்துகின்றன
"நாங்கள் சரணடைகிறோம்"
ஆயினும் யாரிடம்?
கொடைபெறாத காட்டுத்தெய்வமென வெறித்துப்பார்க்கும் எதிர்காலத்திடமா?
இந்தக் குளிர்காலத்தில் நிறைய முறை பயங்கரம் எனைச் சிறையிலடைத்தது
ஆனால் திகைப்பு விடுவித்தது அதிர்ஷ்டவசமாக
ஆகவே நான் எதிர்கொண்டேன்,
சொல்ல முடியாதவற்றின் சூறாவளிகளை,
காஃபியின் கசப்பு போல நீடித்த ஒரு புராதனமான காதலை,
பின்னர் ஏதேதோ விசைகளால் சாக்குப்பைக்குள் வைத்துக் கடத்தப்பட்டு
எங்கோ கண்விழிக்க நேர்ந்த அநேக தருணங்களை.
இப்போதோ வந்திருக்கிறேன்
கடலின் ஆஸ்பத்திரி வராந்தாவுக்கு, எனது மருத்துவ அறிக்கைகளுடன்.
எல்லாவகையிலும் இருட்டப் போகிறது
முகில்கள் வீடு திரும்புகின்றன தத்துவ வகுப்பு முடிந்து.
இத்தனைக்குப் பிறகும் இது சாத்தியமா?
விண்ணவர்கள் வாயைப் பிளக்கிறார்கள்
சிறுவனொருவன் மணலில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறான்
இனிமேல் அவனைத் தொட ஏலாது, புகைமூட்டத்தால்,
காய்ச்சலுற்ற நிழல்களால், ஏன் திருவாளர். காலத்தாலும்தான்
ஆம், தோணியில் ஏறி அவன் சென்றுவிட்டான் மறுகரைக்கு
யாவும் சாத்தியமாக இருந்த ஒரு பிரதேசத்திற்கு.
வழக்கம்போல மண்ணில் சாய்கிறேன்
ஆரத்தழுவுகிறது அப்பாவியான சில்லென்ற காற்று
நல்லவேளையாக அதனிடமில்லை
ஒரு அபிப்பிராயமும். மெல்லிய ஆறுதல்.
எங்கிருந்தோ கேட்கும் அவசர ஊர்தியின் அலறல்
என் தலைக்குள்ளிருந்தா எழுகிறது அது?
தேநீர் விற்பவரின் க்ளிங்...க்ளிங்... பிறகு எழுந்துசென்று
ஆவி பறக்க ஒரு தேநீர்
ஏதென்று அறியேன் எப்படியென்றும் அறியேன்
ஒர் இனம்புரியாத உந்துதல் எழுகிறது என்னில்
உறைந்த பனி உருகுகிறது உள்ளுக்குள்
இனி நான் மினுங்கும் கிளிஞ்சல்களாவேன்
மின்னல்கள் ஆவேன்
கட்டக்கடைசியில் தூரம் ஆவேன்
*
நன்றி: வனம் இணைய இதழ் 14
Comments
Post a Comment