பாடல்
Artist: Caspar David Friedrich |
கூழாங்கல்லினைக் கடந்து என்னைக் கடந்து
தொலைவுகளினூடே
காயங்களுடன்
உனது திசையில்
நான் வந்தால் நழுவிப்போய்விடு.
ஆனால் சொப்பனத்தில் எட்ட எட்ட நின்று
உன் இளஞ்சிவப்பு உதடுகளை மட்டும்
எனக்குச் சுழித்துச் சுழித்துக்காட்டு,
போதும்.
ரோஜாக்களைப்
பரிசுப்பொருட்களை
நிலவொளியை
உன்னிடம் உன்னிடம் நீட்டினால்
தரையில் தரையில் எறிந்துவிடு
சட்டெனப் புலப்பட்டுச் சட்டென மறைந்து
என்னை பரிசிக்க பரிசிக்க வந்து
பரிசிக்காமலே போ
ஆனால் மொத்தமாய் மொத்தமாய்
விட்டுச்செல்லாதே உனது நறுமணத்தை.
எனது ஞாபகத்துக்கு எட்டும்
உயரத்தில்
குண்டூசி அளவு மிச்சம் வை,
போதும்.
தருணம் பார்த்துக் கால்களை அல்ல
பிறவிகளை வாரிவிடு.
எவ்வளவு இயலுமோ அவ்வளவு
அலட்சியப்படுத்து.
மெழுகுவர்த்திச் சுடர்களை எரிமலைகள் அழைப்பதில்லை.
தூசிகளுக்கோ இங்கிதமே இல்லை.
எனவே அருகாமையின் உயிரெழுத்துக்களை
மாத்திரம் மறந்துவிடு.
சந்தித்தால் பிரிய நேரிடும் இன்ப வடிவே,
ஆதலால் சீவனுக்கு எட்டாமல்
ரகசியமாகவே இரு எனது மரண தேதியைப்போல
உன்னை எண்ணி எண்ணி
அப்போதுதான் என்னைப்
பிரமாதமாக
அழித்துக்கொள்ள முடியும் எனக்கு.
*
(அந்தியில் திகழ்வது தொகுப்பிலிருந்து)
Comments
Post a Comment